மொழிபெயர்

ஆகாசக் கருடன்

ஆகாயக்கருடன், ஆகாசக் கருடன் அல்லது கொல்லன் கோவை (Corallocarpus epigaeus) எனப்படுவது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது கோவை இனத்தைச் சேர்ந்ததும், படரும் கொடியுடைய, கிழங்குடைய, தன்னிச்சையாய் வளரும் தாவரமாகும். இது எரிட்ரியா, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், கென்யா, தன்சானியா, ருவாண்டா, சையிர், நையீரியா, ஓமான், இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளை தாயகமாகக் கொண்டது. ஆகாச கருடன் மிதவெப்ப பகுதிகளில் விளைகிறது. ஆகாசக் கருடன் கிழங்கு கசப்புச் சுவையுடையதும், மருத்துவப் பயனுடையதும், சித்த வைத்தியத்துறையில் பயன்படுத்தப்படும் ஒன்றாகவுள்ளது. இதனை உணவுக்காக பயன்படுவதில்லை. இதன் வேரும் மருத்துவத்திற்கான பயன்படுத்தப்படுகின்றது.

ஆகாசக் கருடன்
ஆகாசக் கருடன் இலையும் காயும்

"கோராலோகார்பஸ் எபிகாயஸ்" (Corallocarpus epigaeus) என்ற தாவரவியல் பெயர் கொண்ட இத்தாவரம் உலர்ந்த காடுகளில் வளர்கிறது. இது ஒரு நீர்த்தாவரமோ, களையோ, புல்லுருவியோ அல்லது ஒட்டுண்ணியோ அல்ல. இது டிசம்பர் முதல் மார்ச் வரையான மாதங்களில் பூக்கும். வழமையான கிழக்குகளை போன்று மண்ணுக்குள் வளரும் தன்மை இதன் கிழங்குகளுக்குக் கிடையாது. இது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, கொடிகளில் படர்ந்து வளரக்கூடியது. பல மாதங்கள் காய்ந்து போகாமல் இருக்கும் தன்மை கொண்டது. 3-5 கோணங்களுள்ள, 8 x 8 செ.மீ. அளவுடைய, கூரான, இதய வடிவ அடி கொண்ட, பல் போன்ற 3 செ.மீ இலைக்காம்புடைய இலைகளைக் கொண்டது. இதன் பூக்கள் மஞ்சள் நிறமுடைய, 5 செ.மீ பூங்காம்பு கொண்ட, தடிப்பான, 2 மிமீ குறுக்களவு கொண்ட பூவிதழ் வட்டம் கொண்ட, 3 மகரந்த சேகரம் உடைய, 4 மிமீ அண்டகோசம் (சூலக அறை) உடைய, நீண்ட, குழாய் அமைப்புக் கொண்டவை.

உயிரியல் வகைப்பாடுதிணை தாவரம்
பிரிவு கலன்றாவரம்
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை கியுகுர்பிட்டேல்ஸ்
குடும்பம் கியுகுர்பிட்டாசியே
பேரினம் கோராலோகார்பஸ்
இனம் கோராலோகார்பஸ் எபிகாயஸ்

பயன்பாடு:
 • உடல் தேற்றவும், பலம் ஆகியவற்றுக்கு இது மருந்தாக பயன்படுகின்றது.
 • நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீர இதன் கிழங்கு பயன்படுகின்றது.
 • தேள் கொட்டிய நஞ்சு நீங்க கிழங்கு பயன்படுகின்றது.
 • பாம்பு நஞ்சு, கீழ் பிடிப்பு, மேக நோய்கள் தீரவும் இதன் கிழங்கு பயன்படுகின்றது.
 • ஆகாசக் கருடன் கிழங்கு சீதப்பேதி, கீல்வாதம் ஆகியவற்றுக்கும் பயன்படுகின்றது.
 • இக்கிழங்குள்ள பகுதியில் விசமுள்ள உயிரினங்களின் நடமாட்டம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
 • திருஷ்டி கழியும் என்ற நம்பிக்கையில் இக்கிழங்கை வீட்டில் கட்டித் தொங்கவிடும் வழக்கம் உள்ளது.

3 கருத்துகள்:

 1. இதன் விதை சிவலிங்கம் மாதிரி இருக்குமா?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை. மிகவும் சிறிய விதைகள். இதன் பழம் கௌவைப் பழத்தை ஒத்தது.

   நீக்கு