மொழிபெயர்

சீதா மரம்

சீதா மரம் என்பது சீதா மலர் (Sita flower) அல்லது சீதாப்பூ (Seetha flower) எனப்படும் பூக்களைக் கொண்ட ரொடோடென்ரொம் அபோரெம் (Rhododendron arboreum) என்ற தாவரவியல் பெயர் கொண்ட பசுமைத் தாவரம் அல்லது மரமாகும். இது பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, பாக்கிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இதன் பூ நேபாளத்தின் தேசிய மலராக உள்ளது. இம்மரம் இந்தியாவின் உத்தராகண்டம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் மாநில மரமாக உள்ளது.

Sita flower

பெயர்க் காரணம்
சீதா மலர் எனும் பெயர் இலங்கை வழக்கில் இராமாயணக் கதையினை மையமாகக் கொண்டு உருவானது. இராவணன் சீதையை சிறை வைத்ததாகக் கருதப்படும் இடத்தில் (சீதை அம்மன் கோயில், நுவரேலியா) இம்மரங்கள் காணப்படுகின்றன. இதன் இலைகள் தெளிவாகக் காணக்கூடியவாறு நரம்பிழைகளைக் கொண்டுள்ளன. அது சீதையின் துன்பத்தை நீக்கியதால் அமையப் பெற்றது என நம்பப்படுகின்றது. ஆனால், அசோகு (Ashoka tree), அசோகம் அல்லது ஆயில மரம் (Saraca asoca) சீதா மரம் எனவும் நம்பப்படுகின்றது. அசோகு என்றால் மூல மொழியில் "துன்பமற்றது" எனப் பொருள்படுகிறது. மேலும் அசோகம் பூவின் இதழ், மகரந்தக் கேசரம், மலர்ச் சூலகம் ஆகியவன்றின் அமைப்பு ஒரு மனிதன் வில் ஏந்தியவாறு அமைந்துள்ளதாகவும், அது இராமனை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சீதா மலர் சிவப்பானது. அசோகு செம்மஞ்சள் நிறமுள்ளது. மேலும் சீதா மர இலைகள் போன்று தெளிவான நரம்பிழைகள் அசோகுவில் இல்லை. சீதா மரம் இலங்கையில் மட்டும் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. இந்த ரொடோடென்ரொம் அபோரெம் தாவரம் பல இடங்களில் காணப்பட்டாலும், அதன் ஓர் இனமான ரொடோடென்ரொம் அபோரெம் சிலானிகம் (Rhododendron arboreum subsp. zeylanicum) இலங்கைக்கு மட்டும் உரியதாகும். மேலும் இது இலங்கையில் மலைநாடுகளில் மட்டும் காணப்படுகின்றது. ரொடோடென்ரொம் அபோரெம் தாவரம் அசோகு தாவரத்தின் ஓர் இனம் எனவும் கருதப்படுகின்றது.

தன்மையும் இனங்களும்
ரொடோடென்ரொம் என்ற பெயர் "அடர்ந்த போக்குள்ள அல்லது மரம் போன்ற வடிவில் வளர்கின்ற" என்ற பொருளைக் கொண்டது. இம்மரம் 20 மீட்டர் வரை வளர்ந்துள்ளது. ஆயினும் இது பொதுவாக 12 மீட்டர் (36 அடி) உயரமும் 12 மீட்டர் (36 அடி) அகலமும் கொண்டு வளரக்கூடியது. 108 அடி உயரம் கொண்ட மரம் உலகின் பெரிய ரொடோடென்ரொம் மரம் என்ற கின்னஸ் சாதனையைக் கொண்டுள்ளது. அம்மரம் இந்தியாவின் நாகாலாந்தின் கோகிமா மாவட்டத்தில் உள்ள யப்ஃபு மலையில் 1993 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது வளர்ந்து கொண்டேயிருந்தது.

ஆரம்ப மற்றும் மத்திய வசந்த காலத்தில் சிவப்பு, மென்சிவப்பு, வெள்ளை நிறங்களில் இம்மரம் பூக்கிறது. இப்பூக்கள் 5 செ.மீ (2 அங்குலம்) அகலமாகவும் 3-5 செ.மீ (1.25-2 அங்குலம்) நீளமாகவும், மணி போன்ற தோற்றத்தில் காணப்படும். அதன் உள்ளே கருப்பு மலர்த்தேன் உறைகளும், கருப்புப் புள்ளிகளும் காணப்படும். இது ஈரளிப்பான, நீருள்ள, அமிர மண்ணுள்ள, மரங்கள் நிறைந்த இடத்தில் வளர்கிறது. இதில் அகலமான கரும் பச்சை இலைகள் 7–19 செ.மீ (3–7 அங்குலம்) காணப்படும். வெளிர் நிறத்துடன், இலையின் அடியில் பழுப்பு நிற மயிர் படையும் காணப்படும். இம்மரத்தில் பின்வரும் இனங்கள் காணப்படுகின்றன.
  • ரொடோடென்ரொம் அபோரெம் சினமொமெம் (Rhododendron arboreum subsp. cinnamomeum) – இலையின் அடியில் கருவா நிற மயிர் காணப்படும்.
  • ரொடோடென்ரொம் அபோரெம் சிலானிகம் (Rhododendron arboreum subsp. zeylanicum) – இலங்கையின் உயர்நிலங்களில் காணப்படுகின்றது.
  • ரொடோடென்ரொம் அபோரெம் சினமொமெம் அல்பம் (Rhododendron arboreum subsp. cinnamomeum var. album) – வெள்ளைப்பூக்களுடன் பூவிதழ் உள்ளே சிறிய இரத்தச் சிவப்பு புள்ளிகள் காணப்படும்
  • ரொடோடென்ரொம் அபோரெம் டிலாவாயி (Rhododendron arboreum subsp. delavayi) –  சிவப்புப் பூக்களையுடைது.
  • ரொடோடென்ரொம் அபோரெம் நீலகிரிகம் (Rhododendron arboreum Sm. subsp. nilagiricum (Zenker) Tagg) – தமிழ்நாட்டில் காணப்படுகிறது.

இலங்கையில் "பெரும் செம்மலர்" (Maha Rath Mal) என்ற பொருளில் சிங்களத்தில் இது அழைக்கப்படுகிறது. இதன் கலப்பினம் "கட்டாவ்வியென்ஸ்" (Catawbiense hybrid) என்பதாகும்.


உயிரியல் வகைப்பாடு

திணை:

தாவரம்

தரப்படுத்தப்படாத வரிசை:

பூக்கும் தாவரம்

தரப்படுத்தப்படாத வரிசை:

இயூடிகோட்

தரப்படுத்தப்படாத வரிசை:

அஸ்டெரிட்

வரிசை:

எரிகால்

குடும்பம்:

எரிகாசியே

பேரினம்:

ரொடோடென்ரொம்

துணைப்பேரினம்:

கைமெனாந்தீஸ்

இனம்:

ரொடோடென்ரொம் அபோரெம்

இருசொற் பெயரீடு

ரொடோடென்ரொம் அபோரெம்
Advertisement

இலங்கை பயங்கரவாத தடைச் சட்டம்

இலங்கை பயங்கரவாத தடைச் சட்டம் (Prevention of Terrorism Act; சுருக்கமாக PTA) எனப்படுவது இலங்கை 1978 பயங்கரவாத தடைச் சட்டம் ஆகும். இது காவல் துறைக்கு சந்தேகப்படுவோர் மீது தேடுதல், கைதுசெய்தல், அடைத்தல் ஆகிய பரந்த அதிகாரத்தைக் கொடுக்கின்றது. இது முதன்முதலில் 1978 இல் இலங்கையின் முன்னைய சனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனாவினால் தற்காலிகச் சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1982 இல் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.

PTA

சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டார் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் (ஒவ்வொரு 3 மாதமும் புதுப்பிக்கலாம்) தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். சட்டத்திற்கு புறம்பான செயற்பாடு என்பது சுவர் மீது சுவரொட்டி ஒட்டுதல் என்பதுகூட உள்ளடக்கப்படும். இதற்கான தண்டனையாக மரணம் வழங்கப்படலாம். சாதாரண சட்டத்தில் இல்லாத குற்றங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உதாரணம்: பயங்கரவாதி எங்கு இருக்கிறார் என்பது தெரிந்தும் அதனை காவல் துறைக்கு அறிவிக்காது இருத்தல் குற்றமும், அதன் தண்டனையாக 5 வருடங்கள் சிறை அனுபவிக்க வேண்டும். ஒரு நபர் ஓர் இரவு பயங்கரவாதியுடன் தங்கியிருத்தால், அது அதிகபட்சம் 25 வருடங்கள் சிறைவாசம் பெற வேண்டிய குற்றமாகும்.

விமர்சனம்
வட கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு எதிராக சரிசமமற்ற விகிதத்தில் இச்சட்டம் பயன்படுத்தப்படதென் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கெதிராக சித்திரவதை, மரண தண்டனை மற்றும் பொறுப்புக்கூறல் இன்மைக்காகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பற்ற தமிழ் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றுக்காக விமர்சகர்கள் அரசாங்கம் மீது குற்றம் சுமத்தினர். நீதிமன்ற நீதிபதிகள் தடுப்புக்காவலில் உள்ளவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டு, அவர்கள் பெயர்கள் சிறைச்சாலையில் பதிவு செய்யப்பட்டும், பயங்கரவாத தடைச் சட்ட விதியின்படி அவர்கள் இலங்கை படைத்துறை முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. இச்சட்டத்தின் கீழ், தடுத்தல் மற்றும் பிழையான “சித்திரவதை கூடம்” போன்ற நடவடிக்கைகளுக்கு படைத்துறை முகாம்கள் பயன்படுத்தப்பட்டன. இராணுவ முகாம் சித்திரவதை நிகழ்த்தல் மற்றும் சட்ட விரோத அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு கட்டப்பட்டன. யுத்தத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கண்டனச் செயற்பாட்டிற்காக கைது செய்தலுக்கும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.

தமிழ் மணி

தமிழ் மணி (Tamil Bell)  என்பது 1836 இல் மறைபரப்பு ஆய்வுப்பயணி வில்லியம் சேலேன்சோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட, உடைந்த வெண்கல மணியாகும். இதனை மாவோரி இனப் பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக நியூசிலாந்தின் நோர்த்லாந்து பிராந்தியத்திலுள்ள வங்காரை என்ற பகுதியில் பயன்படுத்தினர்.
Tamil Bell
தமிழ் மணி

இந்த மணி 13 செமீ நீளமும் 9 செமீ ஆழமும் உடையது. இதில் பொறிப்பு காணப்படுகின்றது. மணியைச் சுற்றிக் காணப்படுவது பண்டைய தமிழ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பொறிப்பானது “முகையிதீன் பக்ஸ் கப்பலின் மணி” என்றுள்ளது. அந்த எழுத்துகள் தற்போதைய தமிழ் எழுத்து முறையிலிருந்து அதிகம் வித்தியாசப்படவில்லை. ஆகவே, மணியானது 500 ஆண்டுகள் பழமையானதாக, கடைசி பாண்டியர் காலத்துக்குரியதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.இந்தியவியலியலாளர் இராமச்சந்திர தீட்சிதர் தன்னுடை நூலான "The Origin and Spread of the Tamils" என்பதில் குறிப்பிடும்போது, பண்டை தமிழ் மாலுமிகள் ஆத்திரேலியா, பொலினீசியா பற்றிய அறிவைக் கொண்டிருந்தார்கள் என்கிறார். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் கப்பலோடிகள் வடக்கு ஆத்திரேலியா சென்றடைந்தனர். மணி பற்றி கண்டுபிடிப்பு நியூசிலாந்தில் தமிழர் வாழ்ந்தனர் என்ற ஊகத்தை உருவாக்கினாலும், அது போதுமானதாக இல்லை. வன்னிக்கும் தென் கிழக்காசியாவிற்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு அதிகரித்திருந்த வேளையில் திருகோணமலையிலிருந்து மாலுமிகள் நியூசிலாந்து சென்றிருக்கலாம். இந்தியர்களுடன் தொடர்பினைப் பேணிய போர்த்துக்கேய கப்பலோட்டிகளினால் இந்த மணி கரையில் போடப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் பல இந்திய கடற்கலங்கள் ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாறான கப்பல்களின் உடைந்த எச்சங்களில் இருந்து இம்மணி நியூசிலாந்து கரைக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

இந்த மணியை தற்போது நியூசிலாந்து டே பாபா டொங்கரேவா கண்காட்சியகம் என்றழைக்கப்படும் நூதனசாலைக்கு வில்லியம் சேலேன்சோ அன்பளிப்புச் செய்தார். தற்போதும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சீயக்காய் மரம்

சீயக்காய் மரம் (Sapindus) என்பது விழுதி குடும்பத்தைச் சேர்ந்த சிறிய மரமும் புதர் வகையுமான ஐந்து முதல் பனிரெண்டு இனங்களைக் கொண்ட பேரினத் தாவரமாகும். இவ்வினம் சூடான மிதவெப்பமண்டலம் முதல் வரண்ட பிரதேசம் வரையிலான இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இப்பேரினம் இலையுதிர் மற்றும் மாறா பசுமை இனங்களைக் கொண்டுள்ளது. இவ்வினப் பேரினங்கள் சிலவற்றின் பழத்தின் சதைப்பகுதி சவர்க்காரம் செய்யப் பயன்படுத்தப்படுவதால், அவற்றை soapberries அல்லது soapnuts என ஆங்கிலத்தில் அழைப்பர்.

சீயக்காய் மரம்

இதனை தமிழில் சிகைக்காய் அல்லது சீக்காய் எனவும் அழைப்பதுண்டு. சிகை என்றால் தலை முடி என்று பொருள். இதனை தலைக்குத் தேய்த்து குளிப்பதுண்டு. சிகைக்காய் என்பது மருவி சீயக்காய் அல்லது சீக்காய் என பயன்படுத்தப்படுகிறது.

இதன் ஆங்கிலப் பொதுப்பெயர் இலத்தீன் சொல்லான sapo என்பதில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் சவர்க்காரம் ("soap") என்பதாகும். மேலும் indicus என்பது இந்தியா என்பதற்கான பொருள் ஆகும்.இதன் இலைகள் 15–40 செ.மீ (5.9–15.7 அங்குலம்) வரை நீளமாக வளரக்கூடியன. ஓலை 14-30 இலைகளைக் கொண்டு காணப்படும். இதன் மலர்கள் பெரிய பூங்கொத்தில் இருந்து உருவாகின்றன. இதன் சிறிய மலர்கள் பாலேடு வெண்மை நிறமுடையன. பழம் சிறியதும் தோல் போன்ற வெளி அமைப்புடன் உள்ளோட்டுச்சதையம் கொண்டு காணப்படும். இது 1–2 செ.மீ (0.39–0.79 அங்குலம்) குறுக்களவு கொண்டதும், மஞ்சள் நிறமானது பழுத்ததும் கருமையாக மாறிவிடும். இதனுள் ஒன்று முதல் மூன்று வித்துகள் வரை காணப்படலாம்.

பயன்பாடு

சீயக்காய் டஸா் பட்டிற்கான இயற்கைச் சாயத்தை உருவாக்கப் பயன்படுகின்றது. உள்ளோட்டுச் சதைக்கனி இயற்கை மேல் பரப்பி உள்ள சப்போனின் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இதனை பழங்காலத்தில் ஆசிய நாட்டவரும் செவ்விந்தியரும் கழுவுவதற்காகப் பயன்படுத்தினர்.

வரலாற்று ரீதியாக உள்நாட்டு மருத்துவத்தில் சீயக்காய் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அறிவியல் ஆய்வு ரீதியாக அதன் விளைவு பற்றி அறியப்படவுமில்லை உறுதிசெய்யப்படவுமில்லை.

கொரகொல்லை தேசிய வனம்

கொரகொல்லை தேசிய வனம் (Horagolla National Park) என்பது இலங்கையில் உள்ள பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும். சிங்களத்தில் எண்ணை வகை மரம் ஒன்று “கொர” என்று அழைக்கப்படும். அப்பகுதியில் அதிகமான “கொர” எனப்படும் எண்ணைத் தாவரங்கள் மிகுந்து இருப்பதால் அவ்விடம் கொரகொல்லை எனும் பெயர் பெற்றது. அதிக உயிரியற் பல்வகைமை காணப்பட்டதால், இது ஆரம்பத்தில் செப்டம்பர் 5, 1973 அன்று வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பின்பு யூன் 24, 2004 அன்று கொரகொல்லை தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது. கொரகொல்லை மேல் மாகாணத்தில் உள்ள ஒரேயொரு நகரப் பூங்காவாகும். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் சொந்த இடமான வலவூவைக்கு அருகில் கொரகொல்லை அமைந்துள்ளது. இப்பூங்காவானது கொழும்பிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் ஆள்கூற்று 7°08′22″N 80°05′08″E ஆகும். 33 கெக்டயர் பரப்பில் அமைந்துள்ள இதனை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பராமரிக்கின்றது.

கொரகொல்லை தேசிய வனம்
கொரகொல்லை தேசிய வனம்

கொரகொல்லை ஒரு தாழ்நில மழைக்காடாகும். இப்பூங்கா உக்கல் மண் அமைப்பைக் கொண்டதும் வருடம் முழுவதும் சூடான காலநிலையுடன் காணப்படும். இப்பகுதியில் எண்ணை தாவரம், கூந்தற்பனை, நெதுன், காட்டு மா, அரச மரம், ஏழிலைப்பாலை, வகுளம், ஈரப்பலா போன்ற தாவரங்கள் மிகுதியாகவுள்ளன. மேலும் யானைக் கொழிஞ்சி மரங்களையும் இப்பகுதியில் காணலாம். காட்டுப்பகுதியில் தேக்கு, கொன்றை போன்ற மரங்களைக் காணலாம்.

மீன்பிடிப் பூனை, வெண் புள்ளிச் சருகுமான், செந்நரி, பழுப்பு மலை அணில் ஆகிய பாலூட்டிகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கொரகொல்லை பறவைகளைப் பார்க்கும் இடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு 68 பறவை இனங்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்டைக்கிளி, கரு நெஞ்சு கொண்டைக்குருவி, குக்குறுவான், ஆசியக் குயில் போன்ற இங்கு பொதுவாகக் காணப்படும். இலங்கை பழுப்பு இருவாய்ச்சி, இலங்கை தொங்கும் கிளி, லயாட் குட்டைக்கிளி, சின்ன மீன்கொத்தி போன்ற பறவைகளும் காணப்படுகின்றன. அருகிய நறுக்கி பட்டாம்பூச்சி, இலங்கை அழகி, நீல மோர்மன் போன்ற பட்டாம்பூச்சிகள் இங்கு பொதுவாகக் காணப்படும். ஆமை இனங்கள் உட்பட்ட பல அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.