மொழிபெயர்

இந்தியாவில் வன்புணர்வு

இந்தியாவில் வன்புணர்வு அல்லது இந்தியாவில் வன்கலவி (Rape in India) என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல் ஆகும். இந்தியாவில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களில் வன்புணர்வு நான்காவது இடம் பெறுகின்றது. 2013 இல் வெளியான தேசிய குற்றப் பதிவு திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை 24,923 வன்கலவி முறைப்பாடுகள் 2012 இல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கின்றது. அவற்றில் 24,470 (98%) குற்றச் செயல்கள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் வன்புணர்வு

தலைக்கு எத்தனை விகிதத்தில் இந்தியா வன்புணர்வு குறைவானதாகக் காணப்படுகின்றது. ஆயினும் பெரியளவிலான வன்புணர்வுகள் அறிக்கையிடப்படாமல் உள்ளன. ஆயினும் அறிக்கையிடும் அளவு கடந்த ஆண்டுகளில் கூடியுள்ளது. சில வன்கலவிச் சம்பவங்கள் ஊடகங்கள் மூலம் பெரியளவில் மக்களை அடைந்து, பொது எதிர்ப்பினை ஏற்படுத்தின. இது இந்திய அரசாங்கம் வன்புணர்வு குற்றங்கள், பாலியல் தாக்குதல்கள் என்பவற்றுக்கான தண்டனை சட்டத்தொகுப்பை புதுப்பிக்க வழி ஏற்படுத்தியது.

2015 ஆம் ஆண்டு புள்ளிவிபரப்படி, மத்தியப் பிரதேசம் மற்றைய மாநிலங்களைவிட அதிகளவான வன்கலவி சம்பவங்களைப் பதிவு செய்த மாநிலமாகத் திகழ்கிறது. தலைக்கு எத்தனை விகிதத்தில், சோத்பூர் நகர் அதிகளவு வன்கலவி சம்பவங்களைப் பதிவு செய்த நகராகவுள்ளது. மேலும், சமகால வரலாற்று நிகழ்வினை நோக்கினால், இந்தியப் பிரிப்பின்போது சில 100,000 பெண்கள் கடத்தப்பட்டும் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டனர் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்திய தண்டனைச் சட்டம் 

3 பெப்ரவரி 2013 இக்குப் பின்னர் திருத்தப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் வன்புணர்வு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது:


§ பிரிவு 375. ஒர் ஆண் "வன்புணர்வு" செய்தல் என்பது அவன்:–– (அ) தன் ஆண் குறியை, எச்சந்தர்ப்பத்திலும், பெண்ணின் பெண்குறி, வாய், சிறுநீர்வழி அல்லது குதம் என்பனவற்றுள் செலுத்துதல் அல்லது பெண்ணை அவ்வாறு செய்யச் செய்தல் அல்லது பிறர் மூலம் செய்வித்தல் (ஆ) எச்சந்தர்ப்பத்திலும், ஏதாவது பொருள் அல்லது உடல் பகுதி, ஆண்குறி அல்லாத ஏதாவது மூலம் பெண்ணின் பெண்குறி, சிறுநீர்வழி அல்லது குதம் என்பனவற்றுள் செலுத்துதல் அல்லது பெண்ணை அவ்வாறு செய்யச் செய்தல் அல்லது பிறர் மூலம் செய்வித்தல்; அல்லது (இ) பெண்ணின் உடலை மோசடி செய்து பெண்குறி, சிறுநீர்வழி, குதம் அல்லது பெண்ணின் ஏதாவது உடல் பகுதியில் நுழைத்தல் அல்லது அவன் அல்லது பிறரால் அவளை அவ்வாறு செய்ய வைத்தல்; அல்லது (ஈ) அவன் வாயை பெண்ணின் பெண்குறி, குதம், சிறுநீர்வழி என்பவற்றில் பிரயோகித்தல் அல்லது அவன் அல்லது பிறரால் அவளை அவ்வாறு செய்ய வைத்தல் என்பனவாகும். பின்வரும் ஏழு விபரிக்கப்பட்ட சூழ்நிலையில் கீழ் இது அடங்குகின்றது:
முதலாவது.–– அவளுடைய விருப்பத்திற்கு எதிராக.

இரண்டாவது. –– அவளுடைய ஒப்புதலின்றி.

மூன்றாவது. –– அவளுடைய ஒப்புதலுடன், தாக்குதல் அல்லது மரண பயம் மூலம் அவள் ஒப்புதலைப் பெறல் அல்லது அவள் அக்கறையுள்ள மற்றவரிடமிருந்து ஒப்புதலைப் பெறுதல்.

நான்காவது. –– அவளுடைய ஒப்புதலுடன், தான் அவளுடைய கணவன் அல்ல எனத் தெரிந்திருந்து, அவளுடைய ஒப்புதலை, அவளை தான் சட்டப்படி திருமணம் முடிக்கலாம் என ஆண் நம்ப வைத்து ஒப்புதல் பெறுதல்.

ஐந்தாவது.–– அவளுடைய ஒப்புதலுடன், ஒப்புதல் வழங்கப்பட்ட நேரம் மன வலுக்குறைந்த அல்லது மது வெறி அல்லது அவனால் ஆட்கொள்ளப்பட்ட அல்லது உணர்வு மழுங்கச் செய்த அல்லது உடல்நலமற்ற பொருளால் அவள் உண்மை நிலையை விளங்கிக் கொள்ள முடியாத நிலையிலும் விளைவினாலும் அவள் ஒப்புதல் வழங்குதல்.

ஆறாவது. –– பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட ஒருத்தியின் ஒப்புதலுடன் அல்லது ஒப்புதலின்றி.

ஏழாவது. –– ஒப்புதலை தொடர்பாடல் மூலம் வெளிப்படுத்த முடியாதபோது.

வன்புணர்வு புள்ளிவிபரம்

வயது குறைவானவர்களின் வன்புணர்வு

சிறு அளவிலான ஆய்வின்படி, மனித உரிமைகள் கண்கானிப்பு அமைப்பு 7,200 முதல் 100,000 இல் 1.6 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வயது குறைந்தோர் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றது. இவர்களில் புகார் அளித்த பலர் காவல் துறையினரால் மோசமாக நடத்தப்படுவதாகவும் அவமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வயது குறைவான பெண்கள் இந்தியாவில் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ்நாள் முழுக்க வேதனைப்படுவதாகவும் அறியப்படுகிறது. பாலியலுக்கான மனிதக்கடத்தல், வயது குறைவானவர்களுக்கு எதிரான குற்றம் என்பவற்றில் இந்தியா 7வது இடம் பெறுகின்றது.

அறிக்கையிடப்படாத வன்புணர்வு மதிப்பீடு

பல வன்புணர்வுகள் அறிக்கையிடப்படாமல் உள்ளன. ஏனென்றால் பாதிப்புள்ளானவர்கள் பழிவாங்கப்படுவோம் என்ற பயத்தினாலும் அவமானத்தினாலும் அவ்வாறு செய்வதில்லை. இது இந்தியாவிலும் உலகெங்கும் உள்ள பொதுவான காரணமாகும். பாதிப்புக்குள்ளானவர்கள் பலர் வன்புணர்வு, பாலியல் தாக்குதல் என்பன பற்றி அறிக்கையிட முன்வருதல் அதிகரித்துள்ள போதும், பெருமளவு சம்பவங்கள் அறிக்கையிடப்படாததினால், இந்தியாவில் வன்புணர்வு பிரச்சனைகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என இந்திய நாடாளுமன்றம் தெரிவிக்கின்றது. 2014 ஆண்டு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 5-6 வீதமான சம்பவங்கள் மட்டும் காவல் துறையிடம் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சில மாநிலங்கள் அறிக்கையிடப்படாத பாலியல் வன்முறைகள் பற்றி மதிப்பீடு செய்ய முயன்றுள்ளன. தேசிய குற்ற அறிக்கைகள் பணியகம் மற்றும் தேசிய குடும்ப சுகாதார மதிப்பீடு என்பனவற்றின் 2005 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, 5.8 வீத வன்புணர்வுகள் அறிக்கையிடப்பட்டன. இந்தியாவில் திருமண வன்புணர்வுச் சட்டம் இல்லை. ஆகவே, திருமண வன்புணர்வுச் சம்பவங்கள் அறிக்கையிடப்படுவதில்லை. ஐ.நா 57 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின்படி, 11% வன்புணர்வுகள் மட்டும் உலகளவில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

குறிப்பிடத்தக்க சம்பவங்கள்

23 வயது மாணவி பொதுப் பேரூந்தில் 16 டிசம்பர் 2012 இல் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது, டில்லியில் பெரும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்டது. குறிப்பிட்ட சம்பவத்தின்போது, அம்மாணவி மோசமாக இரும்பத் தடியினால் தாக்கப்பட்டாள். அதே கம்பி அவளினுள் உட்செலுத்தப்பட்டதால் குடல் மோசமாக பாதிக்கப்பட்டு சத்திர சிகிற்சை மூலம் அகற்றப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானதில் இருந்து 13 ஆம் நாளில் அவள் இறந்தாள்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் அமளி உருவாகியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் வன்புணர்வாளர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக இளவயதினர் எதிர்ப்புப் போராட்ட பாரிய பொதுக்கூட்டத்தில் 22 டிசம்பரில் கலந்து கொண்டனர். வன்புணர்வு சந்தேக நபர்களாக ஆறு ஆண்களை காவற்றுறை கைதுசெய்தது.

ஆகஸ்ட் 2013 இல், மும்பையின் ஆங்கில சஞ்சிகையின் பணியின் நிமித்தம், தென் மும்பையின் பாலைவன பகுதிக்கு பணிபுரியும் ஆண் நண்பர்ளுடன் சென்ற 22 வயது ஒளிப்பட ஊடகவியலாளர், வயது வராத ஆண் உட்பட்ட 5 பேரால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளானார். இது நாட்டில் எதிர்ப்புப் போராட்டத்திற்குக் காரணமாகியது. ஏனென்றால், மும்பாய் இரவுச் செயற்பாடுமிக்கதும், பெண்களுக்கு பாதுகாப்பு புகலிடமாகவும் முன்னர் கருதப்பட்டது. சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டு, மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

மே 2014 இல் 14 மற்றும் 16 வயதுடைய சிறுமிகள் உத்திரப் பிரதேசத்தில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். ஆனாலும் விசாரணை அறிக்கை மரணத்திற்கான காரணம் தற்கொலை என்றது. இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட இரு காவல் துறையினர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இக்கூட்டு வன்புணர்வு பற்றி இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் பரந்தளவில் பேசப்பட்டது. சிபிஐ மேற்கொண்ட பரவலான விசாரணையின் பின், வன்புணர்வு, கொலை குற்றச்சாட்டு பொய் எனத் தெரிவித்தது.

14 மார்ச் 2015 இல், மேற்கு வங்காளத்தில் இயேசு மரியாள் கன்னியர் மடத்தில் அத்துமீறி நுழைந்தவர்களால் 71 வயது கன்னியாஸ்திரி கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துமீறி நுழைந்த ஆறு பேரும் செய்த பலிப்பீடத்தை அழித்துக் கொள்ளையிட்டு, சமயப் பொருட்களை அழித்து, பணத்தை களவாடி, கூட்டு வன்புணர்வு செய்தது ஆகிய குற்றச் செயல்கள் சிசிடிவி-யில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1 ஏப்ரலில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு குற்றத்திற்காக தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். இவர்கள் வங்காள தேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

29 மார்ச் 2016 அன்று 17 வயதுடைய தலித் சிறுமியின் பிணம் அவள் தங்கியிருந்த விடுதியின் நீர்த்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதி மேற்பார்வையாளர், பௌதீக ஆசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய மூவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். இது அரசியலுக்குள்ளானதால் சிபிஐ-யிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது.

ஜனவரி 2018 இல், ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஆசிபா என்ற 8 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, குழுப் பாலியல் வன்கலவிக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதில் தொடர்புபட்ட 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து இரு அமைச்சர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை, பொது மக்களை சினம் கொள்ளச் செய்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது. இது இந்தியாவிலும் வெளியிலும் ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்தது.

ஜம்மு காஷ்மீர்


வன்புணர்வும் குழு பாலியல் வல்லுறவும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இடம்பெற்றதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, இந்திய பாதுகாப்புப் படையினரும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களாலும் அவை இடம்பெற்றதாகக் குறிப்பிடுகின்றது. 1991 இல் இராஜ்புட்டானா துப்பாக்கி படைப்பிரிவு குனன் பொஸ்பராக் கிராமத்தினுள் சென்று 30 முதல் 100 பேர் வரையிலான, 13 வயதிற்கும் 70 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களை வன்புணர்வு செய்தது என அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் மூன்று விசாரணைகளை மேற்கொண்டு, அது போலி எனத் தெரிவித்தது.

1947 இந்திய-பாகிஸ்தான் போர் முதல் இஸ்லாமியத் ஆயுதக் குழுக்களினால் வன்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 22 ஒக்டோபர் 1947 அன்று, பாக்கிஸ்தான் இராணுவ வாகனத்தில் பரமுல்லை பகுதிக்குச் சென்ற பஸ்துன் ஆயுதக் குழு ஐரோப்பிய கிறிஸ்தவ அருட்சகோதரி உள்ளிட்ட பெண்களை வன்புணர்வுக்குள்ளாக்கியது. மார்ச் 1990 இல், பரிசோதகரின் மனைவி திருமதி. எம். என். போல் கடத்தப்பட்டு, பல நாட்களாக சித்திரவதை செய்யப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் கை, கால் உடைக்கப்பட்ட உடல் வீதியில் விடப்பட்டுச் செல்லப்பட்டது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணைய கூற்றின்படி, ஐயத்திற்கு அப்பால் அத்தாக்குதலை நிருபிக்கப்படவில்லை. ஆயினும் இச்சம்பவம் நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் உள்ளன என்றது. 2011 இல், அரச மனித உரிமைகள் ஆணையம் அவ்வழக்கை மீள எடுக்குமாறு கேட்டது.

ஜனவரி மாதம் 2018 ஆம் ஆண்டு கதுவா பிரதேசத்தில் உள்ள ரசானா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். ஆசிபாக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இந்து வழிபாட்டிடத்தில் வைத்து பலரால் (8 பேர்) அக்குற்றச் செயல் செய்யப்பட்டது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனுடன் தொடர்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆயுதக் குழுக்களான ஹிஸ்புல் முஜாகிதீன், ஜமியாத்-உல்- முஜாகிதீன் மற்றும் ஹர்கத்-உல்-முஜாகிதீன் என்பன வன்புணர்வுக்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் கொலை மூலம் இனக்கருவறுப்பு, தீ வைத்து அழித்தல், வன்புணர்வு ஆகியவற்றை போர் ஆயுதமாகக் கொண்டு ஆயிரக்கணக்காண இந்து காஷ்மீர பண்டிதர்களை அப்பகுதியில் இருந்து விரட்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய பாதுகாப்புப் படையினாலும் ஆயுதப்படையினாலும் மேற்கொள்ளப்பட்ட வன்கலவி அதிகரிப்பைத் தொடர்ந்து, மனித உரிமைக் கண்கானிப்பு பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்திலிருந்து விலக்கப்படுதலால் வேதனைக்குள்ளாவதாகவும், பயத்தினால் குற்றங்களை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தது.

தென்கிழக்கு இந்தியா

இந்திய ஆயுதப்படைகள் 1958 ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் மூலம் பாதுகாப்புப் பெறுகின்றன என மனித உரிமைகள் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றது. நாகாலாந்து, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெரும் அளவில் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரதேசத்தில் பொதுமக்களுக்கு எதிராக பாலியல் தாக்குதல்கள் போராட்டக் குழுக்களாலும் ஆயுதம் தாங்கிய குற்றவாளிக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உத்திரப் பிரதேசம்

வன்கலவி, பாலியல் தாக்குதல் ஆகியன பற்றி பரந்தளவில் முரண்பட்ட செய்திகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மக்கள் சிவில் உரிமைக் கழக அறிக்கையின்படி, 2007 இல் மேற்கொள்ளப்பட்ட இவ்வகைத் தாக்குதல்கள் பின்தங்கிய இடத்து ஏழைப் பெண்கள், தலித் ஆகியோர் மீதானது என்கிறது. இதில் பாதிக்கப்பட்ட 90% பேர் தலித் பெண்களாகவும், அதில் 85% வயது குறைந்த தலித் பெண்களாவர் என ஆர்வளர் அறிக்கை குறிப்பிடுகின்றது. ஆயினும் இத்தரவு தேசிய குற்றப் பதிவுகள் பணிமனையின் தரவுடன் ஒத்துப்போகவில்லை. இதன்படி, தலித்துக்களுக்கு எதிராக 6.7% வன்புணர்வும் பாலியல் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.

உல்லாசப் பயணிகளுக்கான அறிவுரை

இந்திய வன்புணர்வுச் சம்பவங்கள் சில நாடுகள் உல்லாசப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கக் காரணமாகியது. பெண் உல்லாசப் பயணிகள் இந்தியாவிற்கு பயணிக்கும்போது, இரவில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் அல்லது கூவியழைக்கும் வாடகை வண்டிகளைத் தவிர்தல், உள்ளூர் உடை அணிதலையும் பழக்க வழக்கங்களையும் மதித்தல், ஒதுக்குப்புறமான இடங்களைத் தவிர்த்தல் ஆகியவற்றுடன், குழுவாகச் சென்றாலும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் தெரிவிக்கின்றது.

மார்ச் 2013 இல், சுவிஸ் தம்பதியினர் ஓர்ச்சா முதல் ஆக்ரா வரை துவிச்சக்கர வண்டி ஒட்டிக் கொண்டிருக்கையில் ததியா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இரவில் தங்குவதற்குத் தீர்மாணித்தனர். அவர்கள் உள்ளூர் வாசிகளால் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, ஆணைக் கட்டி வைத்து, அவருடைய 39 வயது மனைவியை அவருக்கு முன்பாகவே கூட்டு வன்புணர்வு செய்தனர். சுவிஸ் அரசாங்கம் 2013 இல், இந்தியாவில் வன்புணர்வும் பாலியல் தாக்குதலும் அதிகரிக்கின்றன என பயணிகளுக்கான அறிவுறுத்தலை வெளியிட்டது. இது இந்திய சுற்றுலாத் துறையை கவலை கொள்ளச் செய்தது. முன்னைய ஆண்டைவிட 20 இல் இருந்து 30 வீதம் சுற்றுலாப் பயணிகள் வருகை, அதிக வன்புணர்வுச் சம்பவங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது என சில ஊடகங்கள் அறிக்கையிட்டன. பிரித்தானியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் பெண் உல்லாசப் பயணிகள் பயணத்தை இரத்துச் செய்தது 70% எனவும் இது மொத்த இரத்துச் செய்த பயணங்களில் 25% எனவும் அசோசம் முகவர் மதிப்பீடு தெரிவித்தது. ஆயினும் இந்தியாவிற்கு 2012 இல் வருகை தந்தோர் 6.5 மில்லியனாக இருந்து, 2013 இல் 6.8 மில்லியன் அதிகரித்ததுக் காணப்பட்டது. 2014 இல் வருகை தந்தோர் 10 வீதத்தால் அதிகரித்தது. 2015 இல் உல்லாசத்துறை அமைச்சு பெண் உல்லாசப் பயணிகளுக்கான அவசர உதவி சேவையை அறிமுகப்படுத்தியது.

உல்லாசப் பயணம் தொடர்பற்ற சம்பவம் ஒன்றுக்காக, டிசம்பர் 2009 இல் ரஸ்யா பிரஜை ஒருவர் வன்புணர்வுக்கு உட்பட்டதைத் தொடர்ந்து, ரஸ்யா உல்லாச பயண அறிவுறுத்தலை தன் குடிமக்களுக்கு வழங்கியது. “ஒன்றாக இரவுணவு உட்கொண்ட பின்னர், இந்திய அரசியல்வாதி ஒருவர் தன் காரில் வைத்து பெண்ணை வன்புணர்வு செய்தார்” என செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து, இந்தியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (சந்தாரம் லக்ஸ்மன் நய்க்) பாதிக்கப்பட்டவரையும் ஊடாகங்களையும் குற்றஞ்சாட்டியதன் பின் பரந்தளவில் பேசு பொருளாகியது. இதற்காக அவரை அரசியல் கட்சிகள் விமர்சித்தன.

சட்ட நடவடிக்கை

நிர்பயா சம்பவத்திற்கு முன்னர் இருந்த சட்ட அமைப்பினால் பெரியளவில் குற்றவாளிகள் தப்பிக்க வழி காணப்பட்டது. அதன்படி, ஆண்குறி-பெண்குறி வழிப் பாலுறவுக்கு மாத்திரம் வன்புணர்வு பற்றிய வரையறை விளக்கம் இருந்தது. இந்த விளக்கம் 2013 இல் விரிவாக்கப்பட்டு, ஆண்குறி அல்லது ஏதாவது பொருள் அல்லது உடலின் உறுப்பு மூலம் பெண்ணின் யோனி, வாய், சிறுநீர்வழி அல்லது குதம் வழியாகச் செலுத்துதல் அல்லது அவளை அவ்வாறு செய்யச் சொல்லுதல் அல்லது அவளின் விருப்பம் இன்றி செய்தல் வன்புணர்வு என வரையறை செய்தது.

பாதிக்கப்பட்டவர் இறந்தாலோ அல்லது தொடர்ச்சியான பாதிப்பு நிலைக்கு உள்ளாகினாலோ குறைந்தபட்சத் தண்டனையாக, குறைந்தது கடுமையான 20 வருட சிறை அல்லது மரண தண்டணை வழங்கப்பட வேண்டும் என 2013 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. குழு பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கும் இச்சட்டமே தற்போது உள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவு, புணர்வாழ்வு ஆகியவற்றுக்காக இழப்பீடு கேட்கவும் இச்சட்டம் இடம் கொடுக்கிறது. 2013 ஆம் ஆண்டு திருத்திய சட்டம் வயதெல்லையை 16 இல் இருந்து 18 ஆக அதிகரித்தது. இதன்படி, 18 வயதிற்கு குறைவானவர்களின் பாலியல் செயற்பாடுகள் பொருட்படுத்தாது விடப்படுகின்றன. எல்லா அரச, தனியார் வைத்தியசாலைகளும் வன்புணர்வுக்கு உள்ளானவருக்கு இலவச முதலுதவி அளிப்பது கட்டாயம் என்ற புதிய பகுதியும் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள்

வன்புணர்வுக் குற்ற விகிதம் கடந்த 40 வருடங்களில் குறைவடைந்துள்ளது. குற்றத்திற்கான தண்டனை நான்கிற்கு ஒன்று என்ற அளவில் காணப்படுகின்றது. 1973 இல் இந்தியாவின் வன்புணர்வு வீதம் 44.3 ஆக இருந்தது, 1983 இல் 37.7 ஆகவும், 2009 இல் 26.9 ஆகவும், 2010 இல் 26.6 ஆகவும், 2011 இல் 26.4 ஆகவும், 2012 இல் 24.2% ஆகவும், 2013 இல் 27.1% ஆகவும் காணப்பட்டது. ஆனாலும் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் குற்றம் அதிகமாகவுள்ளது. எடுத்துக்காட்டாக, ஐக்கிய இராச்சியத்தில் குற்றத்தின் வீதம் 7% ஆக 2011-12 ஆண்டுகளில் காணப்பட்டது. இது சுவீடனில் 10% ஆகவும், பிரான்சில் 25% ஆகவும் இருந்தது.

திருமண வன்கலவி

இந்தியச் சட்டத்தின்படி, தம்பதியினர் சட்டத்தின்படி பிரிந்திருக்கும் காலம் தவிர்த்து, திருமண வன்கலவி புரிதல் குற்றம் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, ஆண் தன் 18 வயதிற்குக் குறையாத மனைவியுடன் பாலுறவு கொள்வது வன்புணர்வு இல்லை. 1980 களில் பெண் உரிமைக் குழுக்கள் திருமண வன்கலவி சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கும்படி பரிந்துரைத்தனர். திருமண உடன்படிக்கை பாலுறவை அனுமானித்தே மேற்கொள்ளப்படுகின்றது அதனை திருமண வன்கலவி மூலம் குற்றமாக்குவது இந்தியாவின் குடும்ப மதிப்பினைக் குறைக்கும் என அரசாங்கம் தெரிவித்தது. கணவன் மனைவியை பலவந்தமாக உறவுகொள்ளுதல் சட்டப்படி குற்றமில்லை. ஆயினும் இதனை திருமணக் குறைபாடாகக் கொண்டு, திருமண முறிவாகக் கொள்ளலாம்.

அவதூறு

எவரையும் வன்கலவி தொடர்பில் குற்றஞ்சாட்டகூடியவாறு சட்டக் கூற்று “ஒரு இலகுவான ஆயுதம்” என நீதிபதி வீரேந்தர் பாத் குறிப்பிட்டார். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஸ் கம்பீர் குறிப்பிடுகையில், பணத்தைப் பெறவும் திருமணம் முடிக்கவும் பிழையான வழக்கின் மூலம் ஆண் நண்பர்களை அச்சுறுத்தவும் தொல்லை கொடுக்கவும் பெண்களால் அடிக்கடி தவறாக தண்டனை நிபந்தனைகள் “பழிவாங்கும் ஆயுதம்” போன்று பயன்படுத்தப்படுகின்றது என்றார்.

2012–13 இல் அறிக்கையிடப்பட்ட வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் 53% பிழையானது என பெண்களுக்காக டில்லி விசாரணைக்குழு அறிக்கையிட்டது. டில்லியில் 2013 இல் நீதிமன்றத்திற்கு வந்த 460 முறைப்பாடுகளில் 2% (12) மாத்திரம் அறிமுகமில்லாதவர்களால் வன்புணர்வு செய்யப்பட்டது. 41% (189) முறைப்பாடுகள் பெற்றோரினால் குற்றவாளியாக்கவும் பாலியல் உறவை முடிவுக்கவும் முறையிடப்பட்டன. 24% (109) முறைப்பாடுகள் திருமணம் முடிப்பதாகக் வாக்களித்து நிறைவேற்றாததாலும், 30% (141) முறைப்பாடுகள் பழக்கமானவர்களாலும் உறவினர்களாலும் வன்புணர்வு செய்யப்பட்டதாலும் முறையிடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக