மொழிபெயர்

கொரகொல்லை தேசிய வனம்

கொரகொல்லை தேசிய வனம் (Horagolla National Park) என்பது இலங்கையில் உள்ள பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும். சிங்களத்தில் எண்ணை வகை மரம் ஒன்று “கொர” என்று அழைக்கப்படும். அப்பகுதியில் அதிகமான “கொர” எனப்படும் எண்ணைத் தாவரங்கள் மிகுந்து இருப்பதால் அவ்விடம் கொரகொல்லை எனும் பெயர் பெற்றது. அதிக உயிரியற் பல்வகைமை காணப்பட்டதால், இது ஆரம்பத்தில் செப்டம்பர் 5, 1973 அன்று வனவிலங்குகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பின்பு யூன் 24, 2004 அன்று கொரகொல்லை தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது. கொரகொல்லை மேல் மாகாணத்தில் உள்ள ஒரேயொரு நகரப் பூங்காவாகும். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் சொந்த இடமான வலவூவைக்கு அருகில் கொரகொல்லை அமைந்துள்ளது. இப்பூங்காவானது கொழும்பிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது கம்பகா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் ஆள்கூற்று 7°08′22″N 80°05′08″E ஆகும். 33 கெக்டயர் பரப்பில் அமைந்துள்ள இதனை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் பராமரிக்கின்றது.

கொரகொல்லை தேசிய வனம்
கொரகொல்லை தேசிய வனம்

கொரகொல்லை ஒரு தாழ்நில மழைக்காடாகும். இப்பூங்கா உக்கல் மண் அமைப்பைக் கொண்டதும் வருடம் முழுவதும் சூடான காலநிலையுடன் காணப்படும். இப்பகுதியில் எண்ணை தாவரம், கூந்தற்பனை, நெதுன், காட்டு மா, அரச மரம், ஏழிலைப்பாலை, வகுளம், ஈரப்பலா போன்ற தாவரங்கள் மிகுதியாகவுள்ளன. மேலும் யானைக் கொழிஞ்சி மரங்களையும் இப்பகுதியில் காணலாம். காட்டுப்பகுதியில் தேக்கு, கொன்றை போன்ற மரங்களைக் காணலாம்.

மீன்பிடிப் பூனை, வெண் புள்ளிச் சருகுமான், செந்நரி, பழுப்பு மலை அணில் ஆகிய பாலூட்டிகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கொரகொல்லை பறவைகளைப் பார்க்கும் இடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு 68 பறவை இனங்கள் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்டைக்கிளி, கரு நெஞ்சு கொண்டைக்குருவி, குக்குறுவான், ஆசியக் குயில் போன்ற இங்கு பொதுவாகக் காணப்படும். இலங்கை பழுப்பு இருவாய்ச்சி, இலங்கை தொங்கும் கிளி, லயாட் குட்டைக்கிளி, சின்ன மீன்கொத்தி போன்ற பறவைகளும் காணப்படுகின்றன. அருகிய நறுக்கி பட்டாம்பூச்சி, இலங்கை அழகி, நீல மோர்மன் போன்ற பட்டாம்பூச்சிகள் இங்கு பொதுவாகக் காணப்படும். ஆமை இனங்கள் உட்பட்ட பல அச்சுறுத்தப்பட்ட உயிரினங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக