மொழிபெயர்

காஞ்சிப்பட்டு

காஞ்சிப்பட்டு (Kanchipuram Silk) என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுச் சேலை ஆகும். இது ஒரு புவியியல் சார்ந்த குறியீடாக இந்தியா அரசால் 2005-06 ஆம் ஆண்டில் அறிவிக்கபட்டது. 2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஏறத்தாழ 5,000 குடும்பங்கள் இப்புடவைத் தொழிலில் ஈடுபட்டன. அங்கு 25 பட்டு, பருத்தி தொழிற்சாலைகளும் 60 வண்ணச்சாயம் பூசும் பிரிவுகளும் உள்ளன.

காஞ்சிப்பட்டு
காஞ்சிப்பட்டு

இச்சேலைகள் தூய பட்டு நூற்களினால் நெய்யப்படுகின்றன. காஞ்சிப்பட்டு நெய்தலுக்கான தூய பட்டு தென்னிந்தியாவில் இருந்தும் குஜராத்தில் இருந்தும் கிடைக்கின்றன. காஞ்சிப்பட்டு நெய்தலுக்காக மூன்று நெசவுத் தறி நாடாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நெசவாளர் வலமாக வேலை செய்கையில், உதவியாளர் இடப்புற நெசவுத் தறி நாடாவில் வேலை செய்வார். கரை நிறமும் வடிவமும் பொதுவாக பிரதான பகுதியில் இருந்து வேறுபட்டுக் காணப்படும். சேலையில் தொங்கும் குஞ்சம் வேறாக மென்சாயலில் நெய்யப்படும். இது முதலில் வேறாக நெய்யப்பட்ட பின்னரே நேர்த்தியாக பின்னர் சேலையில் சேர்க்கப்படும். குஞ்சம் சேர்க்கப்பபடும் சேலையின் பகுதி பொதுவாக வளைவான வடிவில் அமைக்கப்படும். கலப்படமற்ற காஞ்சிப்பட்டில் உடல் பகுதியும் கரைப்பகுதியும் வெவ்வேறாக நெய்யப்பட்டு ஒன்றோடென்று பிணைக்கப்படும். சேலை கிழிந்தாலும் பிரியாதவாறு இந்த இணைப்பு மிகவும் பலமானது. அத்துடன் கரைப்பகுதியும் பிரிந்துவிடாது. இதனைக் கொண்டே காஞ்சிப்பட்டை மற்றைய புடவைகளில் இருந்து வேறுபடுத்திக் காண முடியும்.




சேலை அவற்றின் அகலமான முற்றிலும் வேறுபட்ட கரைப்பகுதியினால் தனிச்சிறப்பு மிக்கவை. கோயில் கரை, சதுரங்கள், கோடுகள், பூக்கள் போன்றவை காஞ்சிப்பட்டில் பாரம்பரிய வடிவங்களாகும். காஞ்சிப்பட்டில் உள்ள உருமாதிரியும் வடிவமும் தென்னிந்தியக் கோயில்கள் அல்லது இலைகள், பறவைகள், மிருகங்கள் போன்ற இயற்கை தோற்றங்கள் கொண்ட உருவங்களாலும் எழுத்துக்களாலும் உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய புராணக்கதைகளுக்காக ரவி வர்மா வரைந்த ஓவியங்களில் உயர்ந்த குஞ்சங்களுடன் உள்ள இச்சேலை காணப்படுகின்றது. காஞ்சிப்பட்டு சேலைகள் அவற்றின் கடுஞ்சிக்கலான வேலைப்பாடு, நிறம், வடிவம், பொன் நூல் போன்ற மூலப்பொருள் ஆகியவற்றால் மிகவும் விலைமதிப்புள்ளதாகக் காணப்படுகின்றது. மேலும், இச்சேலை அதனுடைய தரம், தனக்கென பெயர்பெற்ற வேலைப்பாடு ஆகியவற்றால் சிறப்புப் பெறுகின்றது.

காஞ்சிப்பட்டு புடவைகள் பளுவான பட்டினாலும் பொன் துணியினாலும் நெய்யப்படுவதால் சிறப்பானதாக கருதப்படுவதோடு, நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் அணியப்படுகிறது.

2008 இல் வெளியான காஞ்சிவரம் என்ற திரைப்படம் காஞ்சிப்பட்டு நெசவாளிகளின் போராட்டத்தைத் சித்தரித்து எடுக்கப்பட்டது.

1 கருத்து:

  1. பிறவற்றிலிருந்து காஞ்சிப்பட்டு வித்தியாசப்படும் முறையைக் காணமுடிந்தது.

    பதிலளிநீக்கு