மொழிபெயர்

செரெண்டிபைட்

செரெண்டிபைட், செரெண்டிபைட்டு அல்லது செரெண்டிப்பைட் (Serendibite) என்பது முதன்முதலில் 1902 இல் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் அரிதான நீர்வகை சிலிகேட்டுகள் வகைக் கனிமம் ஆகும். இது முதன்முதலாக இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு இலங்கையின் பண்டைய அரபு மொழிப் பெயரான செரெண்டிப் என்ற பெயருடன் கூடிய பெயர் சூட்டப்பட்டது. இதனை இரத்தினக் கல்லாகவும் பயன்படுத்துகின்றனர். இது அரிதாகக் கிடைப்பதால் பெறுமதி மிக்கதாகவுள்ளது.

செரெண்டிபைட்

செரெண்டிபைட் ஒரு சிலவே காணப்பட்டது. ஆனால் பர்மாவில் (மியான்மர்) குறிப்பிடத்தக்களவு கற்கள் கிடைத்தன. அதனால் விலையும் குறிப்பிட்டளவு குறைந்தது. ஆரம்பத்தில் இரத்தினக்கல் தரம் உடைய கனிமங்கள் இலங்கையின் இரத்தினபுரியில் 1990 களில் கிடைத்தன. பின்னர், 2005 இல் பர்மாவின் மொகோக் பள்ளத்தாக்கிலும் கிடைக்கத் தொடங்கின. மேலும், செரெண்டிபைட் கனிமம் கனடா, மடகஸ்கார், ரஸ்யா, தன்சானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது.

இக்கனிமம் கருங்கல் பாறையினால் உள்வாங்கப்பட்ட காபனேற்று பாறை உருமாற்ற போரானுடன் தொடர்புபட்ட ஸ்கான் கனிமத்துடன் காணப்படுகிறது. செரெண்டிபைட்டுடன் தொடர்புபட்ட கனிமங்களாக ஈரொபிசைட்டு, ஸ்பினல், புளோகோபைட், ஸ்காபோலைட், கால்சைட், ரெமோலைட், அபடைட், கிராண்டிடைரைட், சிங்கலைட், கையலோபேன், புளோரோ-யுவைட், பாகசைட், கிளினோசோய்சைட், போஸ்டேரைட், வோவிக்கைட், கிராபைட் போன்றன காணப்படுகின்றன. செரெண்டிபைட் கல்சியம், மக்னீசியம், அலுமினியம், சிலிக்கான், போரான்,  ஆக்சிசன் (ஒக்சிசன்) ஆகியவற்றிலான சிக்கலான வேதியல் கலவையினைக் கொண்டுள்ளது. இதனை சபைரின், சோசிசைட் ஆகியனவற்றில் ஒன்று என இலகுவாக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆயினும், இதனுடைய பிரலிபலிப்பு அளவு, இரட்டைப் பண்பு, நிறமாலையியல் தன்மை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை. மோவின் அளவுகோலின்படி, செரெண்டிபைட்டின் உறுதி விகிதம் 6.5 முதல் 7 ஆகும். இதனுடைய பிரலிபலிப்பு அளவு 1.701-1.706 (சோசிசைட்டை ஒத்தது) ஆகவும், அடர்த்தி 3.42-3.52 (புட்பராகத்தை ஒத்தது) ஆகவும் உள்ளது. சமச்சீர் மைய முச்சரிவு படிக வகை படிக அமைப்பைக் கொண்ட இது பிளப்பு அற்றது.

இலங்கையில் கிடைக்கும் செரெண்டிபைட் இரத்தினக்கல் பச்சை-நீலம் அல்லது ஊதா-நீலம் நிறத்திலும், பொதுவாக கருப்பாகத் தெரியும் பர்மிய செரெண்டிபைட் இரத்தினக்கல் மிகவும் கருமையாக நீலப் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றது. மேலும், இது மங்கிய மஞ்சள், நிலப்பச்சை, சாம்பல் நீலம் ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றது. பட்டை தீட்டி பளபளப்பாக்கப்பட்ட செரெண்டிபைட் கவர்ச்சியான கண்ணாடி போன்ற பளபளப்பைக் கொண்டிருக்கும். இது ஒளிபுகும் தரத்தைக் கொண்டிருந்தாலும், பர்மிய வகை மிகவும் கருமையாக ஒளிபுகாதவாறு தோற்றமளிக்கும்.

1 கருத்து: