மொழிபெயர்

தமிழ் மணி

தமிழ் மணி (Tamil Bell)  என்பது 1836 இல் மறைபரப்பு ஆய்வுப்பயணி வில்லியம் சேலேன்சோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட, உடைந்த வெண்கல மணியாகும். இதனை மாவோரி இனப் பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக நியூசிலாந்தின் நோர்த்லாந்து பிராந்தியத்திலுள்ள வங்காரை என்ற பகுதியில் பயன்படுத்தினர்.
Tamil Bell
தமிழ் மணி

இந்த மணி 13 செமீ நீளமும் 9 செமீ ஆழமும் உடையது. இதில் பொறிப்பு காணப்படுகின்றது. மணியைச் சுற்றிக் காணப்படுவது பண்டைய தமிழ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பொறிப்பானது “முகையிதீன் பக்ஸ் கப்பலின் மணி” என்றுள்ளது. அந்த எழுத்துகள் தற்போதைய தமிழ் எழுத்து முறையிலிருந்து அதிகம் வித்தியாசப்படவில்லை. ஆகவே, மணியானது 500 ஆண்டுகள் பழமையானதாக, கடைசி பாண்டியர் காலத்துக்குரியதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.



இந்தியவியலியலாளர் இராமச்சந்திர தீட்சிதர் தன்னுடை நூலான "The Origin and Spread of the Tamils" என்பதில் குறிப்பிடும்போது, பண்டை தமிழ் மாலுமிகள் ஆத்திரேலியா, பொலினீசியா பற்றிய அறிவைக் கொண்டிருந்தார்கள் என்கிறார். 14 ஆம் நூற்றாண்டில் தமிழ் கப்பலோடிகள் வடக்கு ஆத்திரேலியா சென்றடைந்தனர். மணி பற்றி கண்டுபிடிப்பு நியூசிலாந்தில் தமிழர் வாழ்ந்தனர் என்ற ஊகத்தை உருவாக்கினாலும், அது போதுமானதாக இல்லை. வன்னிக்கும் தென் கிழக்காசியாவிற்கும் இடையிலான வர்த்தகத் தொடர்பு அதிகரித்திருந்த வேளையில் திருகோணமலையிலிருந்து மாலுமிகள் நியூசிலாந்து சென்றிருக்கலாம். இந்தியர்களுடன் தொடர்பினைப் பேணிய போர்த்துக்கேய கப்பலோட்டிகளினால் இந்த மணி கரையில் போடப்பட்டிருக்கலாம். அக்காலத்தில் பல இந்திய கடற்கலங்கள் ஐரோப்பியர்களினால் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாறான கப்பல்களின் உடைந்த எச்சங்களில் இருந்து இம்மணி நியூசிலாந்து கரைக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.

இந்த மணியை தற்போது நியூசிலாந்து டே பாபா டொங்கரேவா கண்காட்சியகம் என்றழைக்கப்படும் நூதனசாலைக்கு வில்லியம் சேலேன்சோ அன்பளிப்புச் செய்தார். தற்போதும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

1 கருத்து:

  1. 1980களில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் செய்தி மலரில் இதுபோன்ற ஒரு மணியைப் பற்றி புலவர் இராசு ஐயா எழுதிய நினைவு. அது இதுவா எனத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு