மொழிபெயர்

அரச மரம்

அரச மரம் (Bo) என்பது இந்தியத் துணைக்கண்டம், இந்தோசீனா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட அத்தி இன மரமாகும். இதன் உயிரியல் பெயர் பிக்கஸ் ரிலிஜியோசா (Ficus religiosa) என்பதாகும். இது அரசு, புனித மரம் (Sacred fig), போதி மரம் (bodhi tree) ஆகிய பெயர்களினாலும் அழைக்கப்படுகின்றது. இதனை மரங்களின் அரசன் எனவும் அழைப்பதுண்டு. இது மொராசியே (Moraceae) அல்லது முசுக்கட்டை என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

அரச மரம்

அரச மரம் ஒரு பெரிய, வரண்ட கால ஆண்டுக்கொரு முறை இலையுதிரும் அல்லது அரை-மாறாப் பசுமை மரமும், 30 மீட்டர் (98 அடி) உயரத்திற்கு வளரக்கூடிய மரமும் ஆகும். இதன் அடிமர விட்டம் 9.8 அடி (3 மீட்டர்) வரை வளரக்கூடியது. இலைகள் இதய வடிவமுள்ளதும் தனிச்சிறப்புள்ள நீண்ட நுனி கீழ்நோக்கியவாறு அமைந்தும் காணப்படும். இவை 10-17 செ.மீ (3.9–6.7 அங்குலம்) நீளமுள்ளதும் 8–12 செ.மீ (3.1–4.7 அங்குலம்) அகலமுள்ளதாகவும், இலைக்காம்பு 6–10 செ.மீ (2.4–3.9 அங்குலம்) உள்ளதாகவும் காணப்படும். இதன் சிறிய பழங்கள் 1–1.5 செ.மீ (0.39–0.59 அங்கலம்) விட்டமுள்ளதும், காயாக இருக்கும்போது பச்சை நிறத்தில் இருந்து, பழுத்ததும் கருஞ்சிவப்பாக மாறிவிடும்.

சமயங்களில் அரச மரம்

இந்து, சைனம், பௌத்தம் ஆகிய சமயங்களைச் சேர்ந்தவர்கள் இதனை புனித மரமாகக் கருதுகின்றார்கள்.


கௌதம புத்தர் அரச மரத்தின் கீழ் இருந்து தியானம் செய்கையில் ஞானம் பெற்றார் என பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த இடம் தற்போதுள்ள இந்தியாவிள் பீகாரிலுள்ள புத்தகயா என கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் இருந்த மரம் அழிந்துவிட, அவ்விடத்தில் வேறு மரத்தை நட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் கிளை ஒன்று இலங்கையின் அனுராதபுரத்தில் கி.மு. 288 இல் நடப்பட்டது. இதனை சிறீ மகாபோதி என்ற பெயரில் அழைக்கிறார்கள். இதுவே உலகிலுள்ள பூக்கும் தாவரங்களில் மிகவும் பழமையானதாகும். தென்கிழக்காசியா தேரவாத பௌத்தத்தில், அரச மரத்தின் பெரும் அடிமரம் பௌத்தர்களின் இடமாகவும் கருதப்படுகின்றது.

இந்து சமய சாதுக்கள் இன்றும் அரச மரத்தின் அடியில் இருந்து தியானம் செய்கின்றனர். இந்துக்கள் மரத்தைச் சுற்றி வழிபடுகின்றனர். காலையில் மரத்தைச் சுற்றி 7 முறை சுலோகம் சொல்லும் வழக்கம் உள்ளது. 27 நட்சத்திரங்களும், 12 இராசிகளும், 9 கிரகங்களும், ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் 27 மரங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன என கருதப்படுகின்றது. போதி மரம் பூசம் நட்சத்திரத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக நம்புகின்றனர்.

இந்து சமய நூல்களின்படி, சரசுவதி ஆறு தோற்றத்துடன் இம்மரத்திற்கு தொடர்பு உள்ளது. பிரம்மாவின் நீர்க்குடத்திலிருந்து புறப்பட்ட நீர் இமயமலையிலிருந்த அரசு மரத்தினூடாக ஒடி சரசுவதி தோன்றியதாக கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஆயினும், இந்து சமய நூல்கள் குறிப்பிடுவது குருகிலை மரத்தைத்தான் (Ficus infectoria) என ஆர்த்தர் அன்ரனி மக்டொனலும் ஆர்தர் பெரிடேல் கீத்துவும் குறிப்பிடுகின்றனர்.

பயிர்ச் செய்கையும் பயன்பாடும்

உயிரியல் வகைப்பாடு
திணை தாவரம்
பிரிவு பூக்கும் தாவரம்
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை ரோசாலெஸ்
குடும்பம் மொராசியே
பேரினம் பிக்கஸ்
துணைப்பேரினம் ஆல்
இனம் அரசு

அரச மரம் தோட்டம், பூங்கா ஆகிய இடங்களில் அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகின்றது. இதன் வளர்ச்சிக்கு முழு சூரிய ஒளியும், மணலும், ஈரலிப்பான காலநிலையும் தேவைப்படுகின்றது. இதனை நடும்போது மண்ணின் pH பெறுமானம் 7 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். இதனை வீடுகள் போன்றவற்றின் உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால், வெளியில் வளர்ப்து சிறப்பானது. கன்றுகளுக்கு முறையான பசளையும், சூரிய ஒளியும், நீரும் வழங்கப்படல் வேண்டும்.

இது சித்த மருத்துவத்தில் 50 இற்கு மேற்பட்ட நோய்களுக்கு பயன்படுத்துவதாக சொல்லப்படுகின்றது. சுவாச நோய், நீரிழிவு, காக்கை வலிப்பு, வாயு சிக்கல்கள், எரிவு நோய்கள், தொற்று, பாலியல் குறைபாடுகள், வயிற்றோட்டம் ஆகியவற்றுக்கு இது மருந்தாகப் பயன்படுகின்றது.

இந்திய அரசின் வழங்கும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அரச இலையைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக