மொழிபெயர்

பலோலெம் கடற்கரை

பலோலெம் கடற்கரை (Palolem beach) இந்தியாவின் கோவா மாநிலத்தின் தெற்கில் கனகோனாவில் அமைந்துள்ளது. இதிலிருந்து 2.5 கி.மீ தொலைவில் சவுடி நகர் அமைந்துள்ளது. தென் கோவாவின் மாவட்ட தலைநகர் மட்காவில் இருந்து 40 நிமிடத்தில் இதனை வந்தடையலாம். உல்லாசத்துறையின் முக்கிய இணையத்தளமான ரிப் அட்வைசர் (Tripadvisor) 2017 ஆம் ஆண்டு கடற்கரை தரப்படுத்தலின்படி, இதனை இந்தியாவில் முதலாவதாகவும், ஆசியாவில் மூன்றாவதாகவும் தரப்படுத்தியது. தென் கோவாவில் அனகொண்டா கடற்கரை, பட்னெம் கடற்கரை, போலெம் கடற்கரை ஆகியனவும் உள்ளன.

பலோலெம் கடற்கரை
பலோலெம் கடற்கரை
பலோலெம் கடற்கரை பாரியளவில் கெடாமலும் உள்ளூர் மீனவர்களினதும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளினதும் குடியிருப்பாகவுள்ளது. அங்குள்ள பிரதான கிராமத்திலும் கடற்கரையிலும் இவர்கள் குடிசைகளில் வாழ்கிறார்கள். இக்கடற்கரை கிட்டத்தட்ட 1.6 கி.மீ நீளமானதாகவும், அரை வட்ட வடிவமைப்பில் காணப்படுகிறது. இதனால் ஒரு முனையிலிருந்து முழுக் கடற்கரையையும் ஒருவரால் பார்க்க முடியும். கடற்கரையின் இரு முடிவிலும் கடலிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகள் காணப்படுகின்றன. கடலின் ஆழம் மொதுவாக அதிகரித்துச் சென்று, கடற்கரை வட முடிவில் ஆழமற்று இருப்பதால், சராசரி நீச்சல்காரர்களுக்கு பாதுகாப்பானதாக, வேகமற்ற நீரோட்டத்தைக் கொண்டு காணப்படுகின்றது. கடற்கரையில் உயிர்காக்கும் உதவியார்கள் உள்ளனர்.


இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையமாக கோவா சர்வதேச விமான நிலையம் 67 கி.மீ தூரத்தில் உள்ளது. மட்கோன் சந்தியிலிருந்து 30 நிமிடத்தில் அடையக்கூடிய தூரத்தில் கனகோனா தொடரூந்து நிலையம் உள்ளது. ஒவ்வொரு 30 நிமிட இடைவெளியில் கடற்கரைக்குச் செல்லும் பேரூந்து சேவை உள்ளது.

மேட் டாமன் (ஜேசன் போர்ன்) நடித்த த புரூன் சுப்ரிமசி (The Bourne Supremacy) திரைப்படத்தில் கடற்கரை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் இக்கடற்கரையில் இயற்கை அழகு சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கடற்கரை குடிசைகளும், ஒரு முனையில் பாறைகளை மூடியவாறு இலகுவில் தெரியும் மரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவ்விடம் உள்ளூரில் குரங்குத் தீவு என்றழைக்கப்படுகின்றது.

பலோலெம் கடற்கரையை ஒட்டியுள்ள தீவில், அமெரிக்க கருத்தியல், நில கலைஞர் ஒருவரால் கற்சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனை “உன்னால் முடிந்தால் கொடு, எடுப்பதாயின் எடு” அல்லது “பணக் கல்” (காசுக் கல்) என்றழைப்பர். மக்கள் விரும்பினால் பணக்கல்லில் காசை விட்டுச் செல்வார்கள் அல்லது எடுத்துச் செல்வார்கள். இது யாத்திரிகளின் இடமாக மாறிவிட்டது.

1 கருத்து: