மொழிபெயர்

மனிதப் பாதுகாப்பும் முரண்பாடும்

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐநாவின் வரையறை, மனிதப் பாதுகாப்பு என்பது 'பயத்திலிருந்து விடுதலை' (வன்முறை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்தல், அடக்குதல், வெளியேற்றல், குற்றச் செயல், யுத்தம்) 'தேவைகளில் இருந்து விடுதலை' (பொருளாதார, சுகாதார, சூழல், சுற்றாடல், கல்வி, ஜீவனோபாயம் ஆகியவை சார்ந்த தேவைப்பாடுகளால் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்) ஆகிய இரு இலக்குகளையும் தன்னகத்தே கொண்டது.


மனிதப் பாதுகாப்பு அணுகுமுறைகள் பொதுவாக ஏழை மக்களது தேவைகளையும் அத்தேவைகளை அம்மக்கள் பூர்த்திசெய்யத்தக்க அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்புக்களையும் ஒருமுகப்பார்வைக்கூடாக விளக்க முற்படுகிறது. ஏனென்றால் முரண்பாடுகள் (பாரியவை) மேற்குறித்த ஐநாவின் இரட்டை இலக்குகளையும் இல்லாமல் செய்து மோசமான பயப்பிராந்தியையும் தேவைகளின் அதிகரிப்பையும் விரைவாகக்கூட்டி அபிவிருத்தியை அபாய நிலைக்கு உட்படுத்துகின்றன. எனவே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தேவையான பேண்தகு நிலைகொண்ட நீடித்த அபிவிருத்தி வேலைத்திட்டமானது முரண்பாடுகள் பற்றிய உணர்தகு நிலைக்கூடாகவே திட்டமிடப்பட்டு, அமுலாக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, மீளாய்வு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டியது.

மனித உரிமைகள் மைய அணுகுமுறை

இவ் அணுகுமுறையானது அரசியல் சிவில் உரிமைகளைப் பெறுவதலுடன் சமூகப் பொருளாதார பயன்பாட்டியல் அபிவிருத்தியை வெளிப்படையாக இணைக்கிறது.

வறுமை ஒழிப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறை:
ஒரு குறிக்கப்ட்ட வறுமை பீடித்துள்ள சூழலை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்துக்கான வரைபை மனித உரிமைகள் வழங்குகின்றன. இவ் வரைபு அரசியல் காரணிகள், பாதுகாப்பற்ற தன்மை, முரண்பாடு, பிரச்சனை என்பவற்றை கவனத்தில் கொள்கின்றன. பிரிக்க முடியாத உரிமைகளை மையப்படுத்தி அனைத்தையும் உள்வாங்கிய வகையில் பொருளாதார, அரசியல், பாதுகாப்பு அம்சங்களை நேரடிக் கவனத்தில் கொள்ளத்தக்க தந்திரோபாயத்தை ஏற்படுத்த இது உதவுகிறது.

முரண்பாடுகளும் உரிமைகளும்

உரிமை மைய அபிவிருத்தியானது அசமத்துவம், பாரபட்சம், செல்வாக்குமிக்கவர்களால் உரிமை மறுப்பு என்பனவற்றால் எழும் வறுமை நிலையின் மட்டில் அதிக அக்கறையைக் கொண்டது. சர்வதேச மனித உரிமை பிரமாணங்களுக்குப் புறம்பான வகையில் மக்கள் உரிமை மறுக்கப்பட்டு, அபிவிருத்தி மறுக்கப்படுதலும் இங்கு கவனத்தில் எடுக்கப்படுகிறது. ஒரு முரண்பாடுச் சூழ்நிலையில், முரண்பாட்டுக்குட்பட்டுள்ள தரப்பினரால் அல்லது யுத்தத்தில் ஈடுபடுபவர்களால் மக்களின் உரிமைகள் மிக திட்டமிட்ட வகையில் மீறப்படுகின்றன. அத்துடன் யுத்தத்தால் அல்லது முரண்பாட்டால் அதிகம் பொருளாதார இலாபம் பெறுபவர்களும் இதனை ஊக்கப்படுத்துவதுடன் பாதிப்புற்ற மக்களின் அபிவிருத்தியை ஏதோ ஒரு வகையில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். இதனால் அபிவிருத்திப் பணிகள் உரிமை மைய செயற்பாடாகவும் பாதுகாப்புச் சார்ந்த செயற்பாடாகவும் உள்ளன.

பயப் பிராந்தியில் இருந்தும் தேவைகளில் இருந்தும் விடுதலை என்பதில் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள்.
  • அபிவிருத்தி அல்லது அவசரகால நிலைமை வேலைத் திட்டம் இடம் பெறும் ஒரு சூழலில் மக்கள் ஏன் தாம் பயமுறுத்தப்பட்டதாக, மிரட்டப்பட்டதாக, அச்சுறுத்தப்பட்டதாக உணர்கின்றனர்? தமது பாதுகாப்பு அல்லது உரிமை இல்லாமல் போனதாக உணர்கின்றனர்.
  • சாதாரண மக்கள் அடிபட்டுக் கொள்ளும் அல்லது மோதிக் கொள்ளும் சூழ்நிலையை யார் உருவாக்குகின்றனர்?
  • எவ்வாறு உருவாக்குகின்றனர்? எவ்வாறு மக்களின் அன்றாட வாழ்வில் அபாயத்தை அல்லது மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்?
  • உள்ளூர் சூழலில் எத்தகைய முரண்பாடுகள் அல்லது பிரச்சனைகள் மக்களின் பாதுகாப்பைப் பாதிக்கின்றன.
  • இத்தகைய சூழல் நிலையில் 'முரண்பாட்டு உணர்தகுநிலை' பொருந்திய அணுகுமுறை நிறுவனத்தால் பணன்படுத்தப்படலாம்.

மனித உரிமைகளும் மனித பாதுகாப்பும் என்பதில் கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள்.
  • அபிவிருத்தி, அவசர கால வேலைத்திட்டத்தில் மக்களின் எந்த உரிமைகள் மீறப்படுகின்றன?
  • எவ்வாறு மீறப்படுகின்றன? யாரால் மீறப்படுகின்றன?
  • இத்ததைய மீறல்கள் எவ்வாறு சாதாரண பாதுகாப்பின் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக