மொழிபெயர்

இலங்கை நத்தார் மரம்

இலங்கை நத்தார் மரம் அல்லது இலங்கை கிறிஸ்மஸ் மரம் என்பது உலகில் மிகவும் உயரமான செயற்கை நத்தார் மரம் ஆகும். இது கொழும்பிலுள்ள காலிமுகத் திடலில் உருவாக்கப்பட்டது. இம்மரம் 236 அடி 6.58 அங்குலம் உடையது. இது 2016 ஆம் ஆண்டு நத்தார் நள்ளிரவுக்கு முந்தைய விழாவின்போது (24 டிசம்பர்) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை நத்தார் மரம்
பகலிலும் இரவிலும் இலங்கை நத்தார் மரம்
கூம்பு வடிவம் கொண்ட இம்மரம் துண்டு உலோகம், மரம் ஆகியவற்றுடன் பிளாஸ்டிக் வலையால் மூடப்பட்ட இரும்பு கம்பி உருவச்சட்டத்தினால் உருவாக்கப்பட்டது. பச்சை, சிவப்பு, பொன், வெள்ளி நிறந்தீட்டப்பட்ட கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஊசியிலை மர காய்களால் அலங்கரிக்கப்பட்டது. இரவில் ஒளியூட்டுவதற்காக 600,000 ஒளிகாலும் இருவாயி விளக்குகள் (LED) பொருத்தப்பட்டது. மரத்தின் உச்சியில் 20 அடி உயரமும், 60 கிலோ எடையுமுள்ள வாள்வெள்ளி நட்சத்திரம் (கிறிஸ்மஸ் விண்மீன்) அமைக்கப்பட்டது. இந்த மரத்திற்காக மொத்தச் செலவு 12 மில்லியன் இலங்கை ரூபாய்களாகும் (கிட்டத்தட்ட 80,000 அமெரிக்க டொலர்). இதனை அமைப்பதில் இலங்கைத் துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சு ஊழியர்களும் மற்றவர்களுமாக 150 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆகஸ்ட் 2016 இல் ஆரம்பித்த கட்டுமான வேலைகள் டிசம்பர் முதலாவது வாரத்தில், கத்தோலிக்க கர்தினால் “பண விரயம்” என்றும் “கட்டுமானம் கைவிடப்பட வேண்டும். நத்தார் தேவையுள்ளவர்களுக்காக நிதியை பகிர்ந்து கொள்ளும் விழாவேயன்றி, ஊதாரித்தனமாக பண விரயம் செய்வதல்ல” எனவும் “சந்தைப் பொருளாதாரம் சமயத்தைப் பயன்படுத்தி நத்தாரை விற்பனை செய்யும் கருவி” எனவும் விமர்சித்ததால், கைவிடப்பட்டது.

பின்பு, கொழும்பின் பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்துடன் இடம் பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து மீளவும் வேலை தொடங்கியது. ஆரம்பத்தில் 330 அடி உயரத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், இடையில் ஏற்பட்ட தாமதத்தினால் 236 அடிக்கு குறைக்கப்பட்டது. இதன் அருகில் 20 அடி உயரமுள்ள நத்தார் தாத்தா பனிச்சறுக்கு ஊர்தியில் அமர்ந்தவாறு அமைக்கப்பட்டது.

முன்னர் உலகில் மிகவும் உயரமான செயற்கை நத்தார் என அறியப்பட்ட, சீனாவின் குவாங்சௌவில் 184 அடி உயரத்தில், 2015 இல் அமைக்கப்பட்ட நத்தார் மரத்தின் சாதனையை இலங்கை நத்தார் மரம் முறியடித்தது. ஆனாலும், இம்மரம் போதுமான அலங்கரிப்பு, ஊசி இலை ஆகியன இன்றி அமைக்கப்பட்டது என விமர்சனம் செய்யப்பட்டது. குவாங்சௌ நத்தார் மரத்துடன் ஒப்பிடுகையில், இது போதுமான இலைகள் இன்றி, பச்சைப் பசுமை குறைந்து காணப்பட்டது. மேலும், உள்ளகச் சட்டகங்கள் அல்லது அமைப்புத் தெரியுமாறு காணப்பட்டது குறைபாடு. இதன் உருவ அமைப்பு பாரம்பரிய நத்தார் மரம் போன்று இல்லாது, ஏவுகணை வடிவில் அமைக்கப்பட்டது. இது ஜனவரி 2017 இல் பிரிக்கப்பட்டது. டிசம்பர் 2017 இல் கின்னஸ் உலக சாதனைகள் இதனை உலகில் மிகவும் உயரமான செயற்கை நத்தார் மரம் எனப் பதிவு செய்தது.

2 கருத்துகள்: