மொழிபெயர்

சிறப்பு அதிரடிப் படை

சிறப்பு அதிரடிப் படை (Special Task Force) அல்லது சுருக்கமாக எஸ்.ரீ.எப் (STF) என்பது இலங்கை காவல் துறையின் சிறப்பான துணை இராணுவப் பிரிவாகும். இது பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி எதிர்ப்பு ஆகியவற்றில் சிறப்புப் பெற்றது. இது 1983 இல் படைத்துறை அல்லாமல் மிகவும் சிறப்புப்பெற்ற காவல் துறையாக உருவாக்கப்பட்டது.

சிறப்பு அதிரடிப் படை
சிறப்பு அதிரடிப் படை

செயற்காலம் 1983 - தற்போது வரை
நாடு இலங்கை
கிளை இலங்கை காவல் துறை
வகை துணை இராணுவப்படை
பொறுப்பு - சிறப்பு நடவடிக்கைப் படை
- உள்நாட்டுப் பாதுகாப்பு
- பயங்கரவாத எதிர்ப்பு
- நெருங்கிய பாதுகாப்பு
- குண்டு தேடி அழித்தல்
- பயணக்கைதி மீட்பு
- சட்ட அமுலாக்கம்
அளவு சுமார் 8000 (2017)
சுருக்கப்பெயர் எஸ்.ரீ.எப் (STF)
குறிக்கோள் வாக்கு வெற்றி நிச்சயம்
நிறம் கடல் பச்சை, பொன் நிறம்
ஆண்டு விழா 1 மார்ச்
சண்டைகள் ஈழப் போர்

செயற்பாடு

சிறப்பு அதிரடிப் படை இலங்கையில் காவல் துறையின் மிக உயர் பயிற்சி பெற்று பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்ட பிரிவுகளில் ஒன்றாக விளங்குகிறது. சிறப்பு அதிரடிப் படை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிகம் முகாமிட்டிருந்தது. சிறிய அளவிலான பிரிவு மன்னார், வவுனியா மாவட்டங்களில் செயற்பட்டது.

மற்றைய பிரிவுகள் கொழும்பில் பிரமுகர் பாதுகாப்பை வழங்கின. இது சர்வதேச அளவில் இதனுடைய அனுபவத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, வெளிநாட்டு சட்ட அமுலாக்க முகவர்களுடன் திட்டமிடலுக்காக உதவிக்காக அழைக்கப்படுவதுண்டு. 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளில் ஏற்படக்கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்கைளை முகங்கொடுக்க அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கம்

சிறப்பு அதிரடிப் படை 1983 இல் உருவாக்கப்பட்டபோது காவல் துறையினரைக் கொண்டிருந்தது. இதற்கான பயிற்சியை இலங்கை படைத்துறையினரால் வழங்கப்பட்டது. அது படைத்துறை ஆயுதங்களைக் கையாளுதல் கானகச் சண்டை ஆகியவற்றுக்கான அடிப்படைப் பயிற்சியாகவிருந்தது.


இது ஒரு துணை இராணுவமாக இருந்து பின்பு களுத்துறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படைக்கான பிரத்தியோக பயிற்சியைப் பெற்றது. முதலாவது படையலகுகள் இலங்கையின் வடக்கில் இருந்த காவல் நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கவும் விடுதலைப் புலிகளை எதிர்க்கவும் அனுப்பப்பட்டன.

1983 இல் பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவை (SAS) முன்னாள் அணிகள் வரவழைக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சி எதிர்ப்பு ஆகியவற்றில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு எஸ்.ரீ.எப் இன்  மதிப்பு குறிப்பிட்டளவு உயர்ந்தது. சிறப்பு வான்சேவை நிபுணர்கள் எஸ்.ரீ.எப் படைக்கான எளிமையாக்கப்பட்ட பயிற்சித் தொகுதிகளில், கட்டுக்குருந்தை காலல் துறை கல்லூரியில் பயிற்சியளித்தனர்.

பின்பு, 1988 இல் வான்சேவை நிபுணர்களிடமிருந்து சிறப்பு அதிரடிப் படை நிபுணர்களின் கைக்கு பயிற்சி மாறியது. தற்போது முழுமையான பயிற்சியளிக்கும் பிரிவாக, தென் கிழக்கு ஆசியாவில் சிறப்பான பிரிவுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 1984 இல் இஸ்ரேலின் பாதுகாப்பு முகவர் சின் பெத் இலங்கை ஆயுதப்படைகளுக்கு பயிற்சியளித்தனர். அத்துடன் இஸ்ரேலின் பல அதிகாரிகள் கொழும்பில் இலங்கை படையினருக்கு பயிற்சியளித்தனர்.

நடவடிக்கைகள் 

1987 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் முதல் அம்பாறையில் பொத்துவில் வரையான பகுதிகளை சிறப்பு அதிரடிப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஈழப்போரில் பாரியளவில் ஈடுபட்டனர். 15 வெவ்வேறு முகாம்களில் சிறு படைத் தொகுதிகளாக நிறுத்தி வைக்கப்பட்டனர். இந்திய அமைதி காக்கும் படை அமைதி நடவடிக்கைக்காக மட்டக்களப்பிற்கு 1987 இல் வந்தபோது சிறப்பு அதிரடிப் படையினர் மட்டக்களப்பின் வடக்குப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1983 முதல் 1987 வரையான காலகட்டத்தில் சிறப்பு அதிரடிப் படையினரின் ஒரு முகாம்கூட விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.


2002 இல் போர்த்தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின், முதலாவது பாரிய நடுவடிக்கையினை சிறப்பு அதிரடிப் படையினர் “வெற்றி நிச்சயம்” என்ற பெயரில், வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் 4 ஜனவரி 2007 அன்று ஆரம்பித்தனர். இதன் காரணமாக பதினைந்திற்கும் மேற்பட்ட புலிகளின் முகாம்கள் தாக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் புலிகளின் பிரதான முகாமும், பிராந்திய புலனாய்வு மற்றும் விநியோக முகாமான ஸ்டான்லி முகாமும் தாக்குதலுக்குள்ளானது. மேலும், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இதர பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த வாகையடி முகாம், இலங்கை படைத்துறையினதும் சிறப்பு அதிரடிப் படையினதும் சீருடை அடையாளத்துடன் அமைக்கப்பட்ட யனகன் முகாம், நான்கு வாகனங்களுடன் விநியோகப் பொருட்களைக் கொண்ட ஜீவன் முகாம், விலையுயர்ந்த பொருட்களைக் கொண்ட புலிகளின் தலைவர்கள் சந்திக்கும் டயானா முகாம் ஆகியனவும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால், பெரியளவிலான ஆயுதங்கள், ஆயுத உபகரணங்கள், குண்டுகள், வெடி பொருட்கள், தொலைத் தொடர்பாடல் கருவிகள், புவியிடங்காட்டி, மின்னியற்றி, படகுகள் போன்ற கைப்பற்றப்பட்டன. இந்நடவடிக்கையில் சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொள்ளப்பட, அவர்கள் பின்வாங்கினர்.

விமர்சனம்

சிறப்பு அதிரடிப் படை சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், ஆட்கள் காணாமல் போதல் உட்பட்ட பலவித மனித உரிமை மீறல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பிடத்தக்க குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:
1997 இல் ஐக்கிய நாடுகள் அவை விசாரணைக்குழுவின்படி, 1988 இற்கும் 1996 இற்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போன 1219 அறிக்கையிடப்பட்ட வழக்குகளில் 5% சிறப்பு அதிரடிப் படையுடன் தொடர்புபட்டது எனக் கண்டறிந்தது.

24 ஆகஸ்ட் – 5 செப்டம்பர் 1997 இல் இலங்கை சென்ற ஐ.நா சிறப்பு அறிக்கையிடல் அதிகாரி “கொழும்பில் சிறப்பு அதிரடிப் படையின் தடுப்புக்காவலில் இருந்தபோது” ஆட்கள் மரணமடைந்ததாக குற்றஞ்சாட்டினார்.

குறைந்தது இரண்டு சட்டத்துக்குப் புறம்பான கொலைகளில் சிறப்பு அதிரடிப் படை உறுப்பினர்கள் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் அல்லது வெளியாளர்களால் குறிப்பிடப்பட்டது. ஏப்ரல் 1994 இல் அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் மீளவும் ஆரம்பித்த சண்டையைத் தொடர்ந்து, 21 இற்கும் 31 இற்கும் இடைப்பட்ட தமிழ் ஆண்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் கொழும்பிற்கு அண்மையிலுள்ள ஆறுகளிலும் ஏரிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

10 சிறப்பு அதிரடிப் படையினர் (மற்றைய 15 பேர்) கொழும்பு சிறப்பு அதிரடிப் படைத் தலைமையகத்தில் வைத்து கொலை செய்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டனர். அத்துடன், குறைந்தது 17 சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் அதிரடிப் படையினர் உட்பட்ட இலங்கைப் படையினரால் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பதிலாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை கண்காணிப்பாளர்கள் “மக்கள்” இறந்ததாக உறுதிசெய்ய பாதுகாப்புப் படையினர் அவர்கள் புலிகள் எனத் தெரிவித்தனர்.

சிறப்பு அதிரடிப் படை பயன்படுத்தும் இராணுவத் தளபாடங்கள்

வாகனங்கள்
  • யுனிவபல் - கண்ணிவெடிப் பாதுகாப்பு கவச வாகனம்
  • லாண்ட் ரோவர் டிபென்டர்
  • யுனிகோன் துருப்புக் காவி
  • பின்டட் கொமோடோ துருப்புக் காவி

சிறு பீரங்கி
  • வகை 84 - 82 மிமி சிறு பீரங்கி
  • வகை 89 - 60 மிமி சிறு பீரங்கி

கைத்துப்பாக்கிகள்
  • குளோக்
  • பெரட்டா 92
  • ஸ்மித் அண்ட் வெசன் எம் அண்ட் பி
  • எம்1911 கைத்துப்பாக்கி
  • பிரவுனிங் ஹை பவர் 

தாக்கதல் துப்பாக்கிகள்
  • வகை 56 தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி  
  • எம்4 சிறு துப்பாக்கி
  • கியூ.பி.இசட் - 95

துணை இயந்திரத் துப்பாக்கி
  • கெக்லர் அண்ட் கோக் எம்பி5 துணை இயந்திரத் துப்பாக்கி
  • ஊசி துணை இயந்திரத் துப்பாக்கி

குறிசுடு துப்பாக்கி 
  • கெக்லர் அண்ட் கோக் பி.எஸ்.ஜி1

எறிகுண்டு செலுத்தி
  • எம்203 எறிகுண்டு செலுத்தி

ஏறிகணைச் செலுத்தி
  • வகை 69 ஆர்.பி.ஜி

ஏவுகணைச் செலுத்தி 
  • எஸ். ஏ-18 ஏவுகணைச் செலுத்தி 

இயந்திரத் துப்பாக்கி
  • அல்டிமக்ஸ் 100 இலகு இயந்திரத் துப்பாக்கி

1 கருத்து: