மொழிபெயர்

தமிழச்சம்

தமிழச்சம் (Tamilophobia) அல்லது தமிழ்ப்பயம் (Tamil Phobia) என்பது தமிழர், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் போன்றவற்றுக்கொதிரான பயம், வெறுப்பு, தவறான அபிப்பிராயம் ஆகும். அந்நிய வெறுப்பு அல்லது அந்நிய பயம் (xenophobia) அல்லது இனவாதம் போன்றவற்றின் ஒரு வடிவமாக தமிழச்சம் அமைவதாகக் கொள்ளலாம். ஆயினும் இதுபற்றி போதிய வரைவிலக்கணம் இல்லை.

தமிழச்சம்
தமிழச்சம்

பண்டைய காலம் தொட்டே ஓர் இனம் அல்லது குறிப்பிட்ட சமூகக் குழு மீது பிறருக்கு பயம், வெறுப்பு, தவறான அபிப்பிராயம் ஆகியன காணப்பட்டு வந்துள்ளன. இதற்கு தமிழும் தமிழரும் விதிவிலக்கல்ல. ஆயினும், இந்தியா விடுதலை பெற்ற பின்பு ஏற்பட்ட தமிழ், தமிழர் விரோதப் போக்கு நிகழ்வுகள் மற்றும் இலங்கையில் தமிழர் மீதான அடக்குமுறையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இனப்போர் என்பன தமிழச்சம் வலுப்பெற்று உருவாக வழி ஏற்படுத்தின. இதில் இந்தியாவைவிட இலங்கையே தமிழ்ப்பயம் தொடர்பில் எதிர்வினையாற்றிய முக்கிய இடம் ஆகும். இங்கு தமிழரை விரோதமாக பார்க்கும் போக்கு சிங்களவரிடத்திலும் முஸ்லிம்களிடத்திலும் உள்ளது. இலங்கை இனப்போரின் பின் இந்நிலையில் மாற்றம் இருந்தாலும், அதன் அடித்தளத்தில் தமிழச்சம் என்பது நீங்கிவிடவில்லை.

சொல்லிலக்கணம்

கிரேக்க மொழியில் போபோஸ் (φόβος) [ஆங்கில ஒலிபெயர்ப்பு: phobos] என்பது பயம், அச்சம் ஆகிய பதங்களை குறிக்கப்பயன்படுத்தப்படும். இதுவே ஆங்கிலத்தில் போரியா (phobia) எனப்படும். ஆகவே தமிழ்/தமிழர் தொடர்பான பயத்தை ஆங்கிலத்தில் தமிழோபோபியா (Tamilophobia) எனவும் தமிழில் தமிழச்சம் அல்லது தமிழ்ப்பயம் எனவும் அழைக்கலாம். மேலும் தமிழ்/தமிழர் தொடர்பான எதிர்மறை நிலைப்பாட்டை தமிழ் எதிர்ப்பு (anti-Tamil), எதிர் தமிழ்த் தேசியவாதம் (anti-Tamil nationalism), தமிழர் வெறுப்பு (hatred of Tamils), தமிழருக்கெதிரான இனவாதம் (racism against Tamil) ஆகிய பதங்களினாலும் அழைக்கலாம். இது இலங்கையில் புலி (சிங்களத்தில் கொட்டியா) என தமிழருக்கெதிராக விளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

அச்சம்

தமிழ் பற்றிய ஒரு சமூக அச்ச நிலையானது எதிர்ப்புமிக்க உளவியல் அல்லது தனி மனித அச்சமாக “தமிழச்சம்” என பொருட்படுகிறது. இவ்வாறான வரைவிலக்கணம் சில சமூகவியலாளர்களால் இன, சமய எதிர்ப்பு நிலையை அளவிட கையாளப்படுகின்றது.

தமிழ் எதிர்ப்பு

தமிழ் எதிர்ப்பின் ஒரு வடிவமாக இந்தித் திணிப்பு போன்ற நடவடிக்கைகள் அமைந்தன. இவ்வாறான நடவடிக்கைளின் விளைவாக, வட இந்தியாவின் இந்தோ-ஆரிய கலாச்சாரத்தில் இருந்து தென் இந்தியா வேறுபட்டது என்பதற்கான போராட்டங்கள் திராவிட தேசியவாத இயக்கங்களினால் 1930 களிலும் 1950 களிலும் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு தமிழ் நாட்டில் போதிய ஆதரவு கிடைத்தது. அதனால், 1960 களின் பின்னர் அரசியல் கட்சிகள் ஆட்சியமைக்கத் தொடங்கின.

இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் தமிழ் விரோதப் போக்குகள் இடம் பெறத்தொடங்கின. ஆனால், அவை சிங்களம் மட்டும் சட்டம், பல்கலைக்கழக வெட்டும் புள்ளி, தமிழர் உயிர், உடை மீதான தாக்குதல்கள், மலையகத் தமிழருக்கான வாக்களிக்கும் உரிமை இழப்பு என அதிகரிக்கத் தொடங்கின. இதன் விளைவினால், இலங்கையில் தமிழ் இயக்கங்களினால் தனி நாடு கோரி ஆயுதம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது முற்று முழுதான தமிழச்சம் ஆக சிங்களவர் மத்தியில் மாற்றமடைந்தது. பின்னர் தமிழர்-முஸ்லிம் முரண்பாடுகள் இடம்பெற்றும் முஸ்லிம்களிடமும் தமிழச்சம் ஏற்படலாயிற்று.

இலங்கை இனப்பிரச்சனை இந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் தாக்கம் செலுத்தலாயிற்று. இவ்விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தாலும், தமிழ்நாடு பிற்காலத்தில் இவ்வாறு பிளவுபடலாம் என்ற அச்சத்தினால், அங்காங்கே தமிழ் எதிர்ப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டது.

இலங்கை இனப்பிரச்சனையின் ஆயுதம் போராட்டம் 2009 இல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் தமிழச்சம் குறைவடைந்து காணப்படுகின்றது. ஆயினும், தமிழ்த் தேசியம் (தமிழ்நாடு மற்றும் இலங்கைத் தமிழ்த் தேசியம் உட்பட), புலம்பெயர் தமிழர் செயற்பாடுகள், தமிழருக்கான தனிநாட்டுக் கோரிக்கை போன்ற விடயங்களை ஆதரிக்கும் முற்போக்கு அரசியல் கட்சிகள், இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் போன்ற கோரிக்கைகள் போன்றவை தமிழ்ப்பயம் என்ற நிலையை தக்க வைத்துள்ளன. சல்லிக்கட்டு மீதான தடையும் தமிழ் எதிர்ப்பின் ஒர் வடிவமாக பார்க்கப்படுகின்றது.

தமிழர் அடையாளம்

இலங்கையில் தமிழர் அடையாளங்கள் மீது தமிழச்சம் காணப்பட்டன. அந்த அடையாளங்களாவன:
  • தமிழில் உரையாடல்
  • பெண்கள் பொட்டு வைத்தல்
  • தமிழருக்கு உரிய உடையும் திருநீரு பூசலும்
  • தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட விடயங்கள் (கொடி, இலச்சினை, சீருடை, புலிகளின் தலைவரின் படம் மற்றும் பல)

அந்நியரிடத்தில் அச்சம்

அந்நியரிடத்தில் அச்சம் உலகில் பரவலாகக் காணப்படுகின்றது. இது சமயம், இனம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு காணப்படலாம். குறிப்பிடத்தக்க அந்நியரிடத்தில் அச்சங்கள் சில பின்வருமாறு:

  • ஆங்கிலேய அச்சம் (Anglophobia) – ஆங்கிலேயர் / ஆங்கிலேயக் கலாச்சாரம் / இங்கிலாந்து தொடர்பான அச்சம் / பயம்
  • இந்து அச்சம் (Hinduphobia) – இந்துக்களை விரும்பாமை / அச்சம்
  • இஸ்லாமிய அச்சம் (Islamophobia) – இந்துக்களை விரும்பாமை / அச்சம்
  • கிறிஸ்தவ அச்சம் (Christianophobia) – கிறிஸ்தவர் தொடர்பான அச்சம் / பயம்
  • சீன அச்சம் (Sinophobia) – சீனர் தொடர்பான அச்சம் / பயம்
  • போர்த்துக்கேய அச்சம் – போர்த்துக்கேய தொடர்பான (கலாச்சாரம், மொழி) அச்சம்
  • யூத அச்சம் (Judeophobia) – யூத வெறுப்பு / யூதரில் அச்சம்
  • ஜப்பானிய அச்சம் (Nipponophobia) – ஜப்பானியர் தொடர்பான அச்சம் / பயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக