மொழிபெயர்

சீதா மரம்

சீதா மரம் என்பது சீதா மலர் (Sita flower) அல்லது சீதாப்பூ (Seetha flower) எனப்படும் பூக்களைக் கொண்ட ரொடோடென்ரொம் அபோரெம் (Rhododendron arboreum) என்ற தாவரவியல் பெயர் கொண்ட பசுமைத் தாவரம் அல்லது மரமாகும். இது பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, பாக்கிஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இதன் பூ நேபாளத்தின் தேசிய மலராக உள்ளது. இம்மரம் இந்தியாவின் உத்தராகண்டம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் மாநில மரமாக உள்ளது.

Sita flower

பெயர்க் காரணம்
சீதா மலர் எனும் பெயர் இலங்கை வழக்கில் இராமாயணக் கதையினை மையமாகக் கொண்டு உருவானது. இராவணன் சீதையை சிறை வைத்ததாகக் கருதப்படும் இடத்தில் (சீதை அம்மன் கோயில், நுவரேலியா) இம்மரங்கள் காணப்படுகின்றன. இதன் இலைகள் தெளிவாகக் காணக்கூடியவாறு நரம்பிழைகளைக் கொண்டுள்ளன. அது சீதையின் துன்பத்தை நீக்கியதால் அமையப் பெற்றது என நம்பப்படுகின்றது. ஆனால், அசோகு (Ashoka tree), அசோகம் அல்லது ஆயில மரம் (Saraca asoca) சீதா மரம் எனவும் நம்பப்படுகின்றது. அசோகு என்றால் மூல மொழியில் "துன்பமற்றது" எனப் பொருள்படுகிறது. மேலும் அசோகம் பூவின் இதழ், மகரந்தக் கேசரம், மலர்ச் சூலகம் ஆகியவன்றின் அமைப்பு ஒரு மனிதன் வில் ஏந்தியவாறு அமைந்துள்ளதாகவும், அது இராமனை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சீதா மலர் சிவப்பானது. அசோகு செம்மஞ்சள் நிறமுள்ளது. மேலும் சீதா மர இலைகள் போன்று தெளிவான நரம்பிழைகள் அசோகுவில் இல்லை. சீதா மரம் இலங்கையில் மட்டும் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது. இந்த ரொடோடென்ரொம் அபோரெம் தாவரம் பல இடங்களில் காணப்பட்டாலும், அதன் ஓர் இனமான ரொடோடென்ரொம் அபோரெம் சிலானிகம் (Rhododendron arboreum subsp. zeylanicum) இலங்கைக்கு மட்டும் உரியதாகும். மேலும் இது இலங்கையில் மலைநாடுகளில் மட்டும் காணப்படுகின்றது. ரொடோடென்ரொம் அபோரெம் தாவரம் அசோகு தாவரத்தின் ஓர் இனம் எனவும் கருதப்படுகின்றது.

தன்மையும் இனங்களும்
ரொடோடென்ரொம் என்ற பெயர் "அடர்ந்த போக்குள்ள அல்லது மரம் போன்ற வடிவில் வளர்கின்ற" என்ற பொருளைக் கொண்டது. இம்மரம் 20 மீட்டர் வரை வளர்ந்துள்ளது. ஆயினும் இது பொதுவாக 12 மீட்டர் (36 அடி) உயரமும் 12 மீட்டர் (36 அடி) அகலமும் கொண்டு வளரக்கூடியது. 108 அடி உயரம் கொண்ட மரம் உலகின் பெரிய ரொடோடென்ரொம் மரம் என்ற கின்னஸ் சாதனையைக் கொண்டுள்ளது. அம்மரம் இந்தியாவின் நாகாலாந்தின் கோகிமா மாவட்டத்தில் உள்ள யப்ஃபு மலையில் 1993 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது வளர்ந்து கொண்டேயிருந்தது.

ஆரம்ப மற்றும் மத்திய வசந்த காலத்தில் சிவப்பு, மென்சிவப்பு, வெள்ளை நிறங்களில் இம்மரம் பூக்கிறது. இப்பூக்கள் 5 செ.மீ (2 அங்குலம்) அகலமாகவும் 3-5 செ.மீ (1.25-2 அங்குலம்) நீளமாகவும், மணி போன்ற தோற்றத்தில் காணப்படும். அதன் உள்ளே கருப்பு மலர்த்தேன் உறைகளும், கருப்புப் புள்ளிகளும் காணப்படும். இது ஈரளிப்பான, நீருள்ள, அமிர மண்ணுள்ள, மரங்கள் நிறைந்த இடத்தில் வளர்கிறது. இதில் அகலமான கரும் பச்சை இலைகள் 7–19 செ.மீ (3–7 அங்குலம்) காணப்படும். வெளிர் நிறத்துடன், இலையின் அடியில் பழுப்பு நிற மயிர் படையும் காணப்படும். இம்மரத்தில் பின்வரும் இனங்கள் காணப்படுகின்றன.
  • ரொடோடென்ரொம் அபோரெம் சினமொமெம் (Rhododendron arboreum subsp. cinnamomeum) – இலையின் அடியில் கருவா நிற மயிர் காணப்படும்.
  • ரொடோடென்ரொம் அபோரெம் சிலானிகம் (Rhododendron arboreum subsp. zeylanicum) – இலங்கையின் உயர்நிலங்களில் காணப்படுகின்றது.
  • ரொடோடென்ரொம் அபோரெம் சினமொமெம் அல்பம் (Rhododendron arboreum subsp. cinnamomeum var. album) – வெள்ளைப்பூக்களுடன் பூவிதழ் உள்ளே சிறிய இரத்தச் சிவப்பு புள்ளிகள் காணப்படும்
  • ரொடோடென்ரொம் அபோரெம் டிலாவாயி (Rhododendron arboreum subsp. delavayi) –  சிவப்புப் பூக்களையுடைது.
  • ரொடோடென்ரொம் அபோரெம் நீலகிரிகம் (Rhododendron arboreum Sm. subsp. nilagiricum (Zenker) Tagg) – தமிழ்நாட்டில் காணப்படுகிறது.

இலங்கையில் "பெரும் செம்மலர்" (Maha Rath Mal) என்ற பொருளில் சிங்களத்தில் இது அழைக்கப்படுகிறது. இதன் கலப்பினம் "கட்டாவ்வியென்ஸ்" (Catawbiense hybrid) என்பதாகும்.


உயிரியல் வகைப்பாடு

திணை:

தாவரம்

தரப்படுத்தப்படாத வரிசை:

பூக்கும் தாவரம்

தரப்படுத்தப்படாத வரிசை:

இயூடிகோட்

தரப்படுத்தப்படாத வரிசை:

அஸ்டெரிட்

வரிசை:

எரிகால்

குடும்பம்:

எரிகாசியே

பேரினம்:

ரொடோடென்ரொம்

துணைப்பேரினம்:

கைமெனாந்தீஸ்

இனம்:

ரொடோடென்ரொம் அபோரெம்

இருசொற் பெயரீடு

ரொடோடென்ரொம் அபோரெம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக