மொழிபெயர்

பத்மராகம்

பத்மராகம் என்பது ஓர் இரத்தினக்கல் வகையாகும். இக்கல் கொரண்டம் (Corundum) குடும்பத்தைச் சேர்ந்த, மென்சிவப்பு- செம்மஞ்சள் சபையர் (sapphire) இரத்தினக்கல் ஆகும். இது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் தற்போது மடகஸ்கார், தன்சானியா ஆகிய இடங்களிலும், சிறிதளவில் வியட்நாம், கிழக்கு ஆபிரிக்கா ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. தன்சானியா பகுதியில் கிடைக்கும் பழுப்பு-செம்மஞ்சள் கல்லானது பத்மராகம் என அறியப்பட்டாலும், அது பழுப்பு-செம்மஞ்சள் சபையர் என அறியப்படுகின்றது. இது அரியாதாகக் கிடைப்பதால் இதன் விலையும் அதிகமாகும்.

பத்மராகம்
பத்மராகம்

இதில் மென்சிவப்பு-செம்மஞ்சள் மற்றும் செம்மஞ்சள்-மென்சிவப்பு நிற மாற்றத்தில் கற்கள் காணப்படுகின்றன. இதை ஒத்த வேறு சில கற்கள் காணப்படுகின்றன. அவற்றில், மென்சிவப்பில் மிகவும் குறைவான செம்மஞ்சள், ஊதா கலந்த மென்சிவப்பு, மென்சிவப்பபைவிட சற்று அதிகமாக செம்மஞ்சள் ஆகிய கற்களும் காணப்படுகின்றன. ஆனால் அவை பத்மராகம் என வகைப்படுத்தப்படுவதில்லை. 50:50 வீத மென்சிவப்பு-செம்மஞ்சள் நிறமுடைய கல்லே சரியான பத்மராகம் என அறியப்படுகின்றது. இது வெப்பமண்டல வானில் சூரிய மறைவு நேரம் ஏற்படும் அழகிய நிறத்தை ஒத்துக் காணப்படும். 30% செம்மஞ்சள் + 70% மென்சிவப்பு அல்லது 70% செம்மஞ்சள் + 30% மென்சிவப்பு ஆகிய நிற அளவிலும் காணப்படலாம். மென்சிவப்பு நிறம் அதிகமுள்ள கற்களை ஜப்பானியர்களும், செம்மஞ்சள் நிறம் அதிகமுள்ள கற்களை ஐரோப்பியர்களும் விரும்புகின்றனர்.

சமஸ்கிருதத்தில் “பத்ம” (Padma) என்பது தாமரையையும், “ராக” (raga) என்பது நிறத்தையும் குறிப்பதில் இருந்து இதன் பெயர் (பத்ம+ராகம் / Padma+raga) பெறப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது. அதாவது தாமரை மலரின் நிறம் உடையது என்ற பொருளை உடையது. இன்னுமொரு கருத்தின்படி, தாமரை மலர்தல் என்ற சிங்களச் சொல்லில் இருந்து இதன் பெயர் பெறப்பட்டு, சமஸ்கிருதத்திற்கு மருவியது என்ற கருத்தும் காணப்படுகின்றது. மேலும், ஜெர்மானியர்கள் இதன் சரியான உச்சரிப்பை Padparadscha என்று பிழையாக உச்சரிக்க அதுவும் ஒரு பெயராகியதாகக் கருதப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் Padmaraga, Pathmaraja, Padmaradscha எனும் பெயர்களால் அறியப்படுகிறது. ஆயினும் இது தமிழில் ஒரு பெயரால் மாத்திரம் அறியப்படுகின்றது.

இது ஒரு மென்சிவப்பு-செம்மஞ்சள் சபையர் இரத்தினமாக இருப்பினும், சிலர் இதனை மாணிக்கக்கல்லின் ஒரு வகை என தவறாகப் புரிந்து கொள்கின்றனர். மாணிக்கக்கல்லும் கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லாகும். கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்த கற்கள் பின்வருமாறு:

  • மாணிக்கம்
  • நீலக்கல்
  • மென்சிவப்பு சபையர்
  • மஞ்சள் சபையர் 
  • செம்மஞ்சள்
  • பத்மராகம் 
  • ஊதா சபையர்
  • பச்சை சபையர்
  • வெள்ளை சபையர்
  • நட்சத்திர சபையர்
  • நிறம் மாறும் சபையர்

குறிப்பு: பத்மராகம் என்ற சொல் இசை இராகங்களில் ஒன்றைக் குறிக்கவும் பயன்படுகின்றது.

2 கருத்துகள்: