மொழிபெயர்

முரண்பாடு

முரண்பாடு (conflict) என்பது எமது வாழ்வின் ஒரு பகுதி. அதனைத் தவிர்க்க முடியாது. எமது வாழ்வில் இருந்து பூரணமாக எடுத்துவிட முடியாது. ஆனால, முரண்பாடுகள் களையப்படவல்லன. அவை உருமாற்றம் செய்யப்பட்டு ஆக்க பூர்வ நிலைக்கு இட்டுச் செல்லப்படக் கூடியன.

ஆக்க பூர்வமாக சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகள் அல்லது சிக்கல்கள் நீண்ட காலமாக கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படாத சூழ்நிலையே முரண்பாடுகளை உருவாக்குகின்றன. பிரச்சனைகள் பொதுவாக முரண்பாடுகளை உண்டுபண்ணுகின்றன. முரண்பாடுகள் இன்னும் அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. பிரச்சனைகளை தீர்க்க முற்படும்போது முன்னெடுக்கும் அணுகுமுறைகளின் மட்டில் அதில் உள்ளோர் உடன்படா நிலையை எட்டும் போதே முரண்பாடுகள் தோன்றுகின்றன. தோன்றிய முரண்பாடுகள் தீர்க்கப்படாதபோது அதிலுள்ளோர் அதனை தீர்க்க வன்முறையை நாடலாம் அல்லது பின்வாங்கலாம். இதனால் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில்லை. மேலும் மேலும் முரண்பாடுகள் வளர்கின்றன.முரண்பாடுகள் இருமட்டங்களில் நிகழ்கின்றன. அவற்றை உள் முரண்பாடுகள், இடை முரண்பாடுகள் என வகைப்படுத்தலாம்.

உள் முரண்பாடுகள்
இடை முரண்பாடுகள்
ஒருவருக்குள்
பலருக்கிடையில்
குடும்பத்துக்குள்
குடும்பங்களுக்கிடையில்
நிறுவனத்துக்குள்
நிறுவனங்களுக்கிடையில்
சமூகத்துக்குள்
சமூகங்களுக்கிடையில்
இனத்துக்குள்
இனங்களுக்கிடையில்
நாட்டுக்குள்
நாடுகளுக்கிடையில்

முரண்பாடுகள் பல்வேறு நிலைகளுக்கூடாகவே ஏற்படுகின்றன. அவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம்.

முரண்பாட்டுக்கான முன் சூழல்

முரண்பாடு உள்ளதை யாரும் உணர்வதில்லை. பல பிரச்சனைகள் கவனிக்கப்படாமலே அவை ஆழப்படுத்தப்பட்டுவரும் சூழ்நிலையும் முரண்பாட்டை ஏற்படுத்தவல்ல மூலகாரணிகள் இனங்காணப்படாமலும் அவை பல பிரச்சனைகளுக்கூடாக பலம்பெறுவதற்கும் வழிவகுக்கப்படும். தமக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே அச்சூழலில் மக்கள் உணர்தகு நிலை அற்று விழிப்புணவற்றுக் காணப்படுவர்.

மறை நிலை முரண்பாடுகள் 

நேரடியாகத் தென்படாமல் மறைமுகமாக இருந்து கொண்டே இருப்பவை. பல்வேறு பிரச்சனைகள், சம்பவங்கள் வாயிலாக வெளிப்படுபவை. மக்கள் இவற்றை ஏதோ பிரச்சனை எனப்பார்த்து சமாளித்து விடலாம் என எண்ணுவர். அத்துடன் இவை பற்றிய விழிப்புணர்வோ, உணர்தகு நிலையோ அற்று காணப்படுவர். மேலோட்டப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் போதுமானது என்ற சிந்தனை முரண்பாடு சிக்கல் மிக்கதாக வலுப்பட வழி சமைக்கும்.

மேலோட்டமாகத் தென்படும் முரண்பாடுகள்

எழும் பிரச்சனைகளும் சிக்கல்களும் உடனடியாக கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக் காட்டும் மக்கள் இம்முரண்பாட்டில் உட்பட்டோரை இனங்காண்பர். ஆனால் முரண்பாட்டுக்கான காரணிகளை கண்டுகொள்ள மாட்டார்கள். முரண்பாட்டாளர்களை இனங்காண்பதனால் தாமும் தமது நியாயத்துக்கேற்ப பக்கம் சேர்ந்து ஒரு தரப்பாரை ஆதரிப்பர். இவ்வாறு இவர்களும் முரண்பாட்டின் பங்குதாரர்களாகி, முரண்பாட்டின் மூல காரணிகளை இனங்கண்டு பிடிக்க முடியாத வண்ணம் ஒரு பக்கச் சார்புடையவர்களாக மாறிவிடுவர். சிலவேளை மேலோட்டமாகக் காணப்படும் முரண்பாடுகள் மூலகாரணிகளை அல்லது பலமான மூலங்களை கொண்டிராமல் பிரச்சனைகளால் அதாவது தண்ணீர், போக்குவரத்து இல்லை என்ற பிரச்சனைகளால் எழுந்தவையாகக் கூட இருக்கலாம்.

பகிரங்க முரண்பாடுகள்

இவ்வகையானவை ஆழமான மூல காரணிகளையும் வெளியே தெளிவாகத் தெரியவல்ல வன்முறையையும் கொண்டு வெளித்தெரியும். மூலகாரணிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் மற்றும் வன்முறை, அதன் தாக்கம், விளைவுகள் என்பனவற்றில் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டிய ஒரு நிலையையும் கொண்டு காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக