மொழிபெயர்

முரண்பாட்டுப் பகுப்பாய்வு

முரண்பாட்டின் முன்னனி, பின்னனி, மூலகாரணிகள், மூலங்கள், உடபட்டுள்ளோர், தொழிற்பாடு, இழுபறி விசைகள் என்பனவற்றை ஓர் ஒழுங்கு முறையாக ஆய்வு செய்யும் படிமுறையே முரண்பாட்டுப் பகுப்பாய்வு  (conflict analysis) ஆகும். இவ்வாய்வு அபிவிருத்தி, மனித நேய மற்றும் சமாதானப் பணிசார் நிறுவனங்கள் அமைப்புக்களுக்கு அவர்கள் பணிபுரியும் சூழலை, சூழ்நிலையை, அவர்களது பாத்திரத்தை, அணுகுமுறையை ஆளமாக விளங்கிக் கொள்ள உதவுகிறது.

ஏன் நாம் முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும்?
  • பின்னனி, முன்னனி, சூழ்நிலை, வரலாறு, தற்போதைய நிலை, சூழல் என்பனவற்றை விளங்கிக் கொள்வதற்காக
  • வெளிப்படையாகத் தென்படுபவர்களை மாத்திரம் இனம்காணாமல் முரண்பாட்டில் உள்ள அனைத்து தரப்பாரையும் தெளிவாக இனம் காண
  • முரண்பாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பாரினதும் முரண்பாடுபற்றிய பார்வையையும் அவர்கள் எவ்வாறு ஒருவர் ஒருவருடன் தொடர்பை அல்லது தொடர்பின்மையையும் கொண்டுள்ளனர் என்பதை கண்டறிய
  • முரண்பாட்டின் பின்னால் உள்ள காரணிகளின் போக்கையும் சிக்கல் தன்மையையும் விளங்கிக் கொள்ள
  • வெற்றி, தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள
  • தீர்வுக்கான காத்திரமான வழிகளையும், தரப்பாரையும் அணுகுமுறைகளையும் கண்டு கொள்ள

முரண்பாட்டு பகுப்பாய்வு ஒரு தடவையுடன் முடிந்துவிடும் விடையமல்ல. சூழல் சூழ்நிலை மாறுவதனால் அது ஒரு தொடர் படிமுறை. எனவே முரண்பாடுகளுக்கான காரணிகளை மாற்றியமைக்க தேவையான செயற்பாடுகளை காலத்துக்குக் காலம் தேவைக்கேற்ப மாற்றலாம். அவ்வாறே பகுப்பாய்வுக்கூடாக அதன் மாற்ற வேகத்தை கணிப்பிடலாம்.

பொதுவாக முரண்பாட்டுக்கான காரணிகள்

ஒரு குறிக்கப்பட்ட சூழலை அல்லது சூழ்நிலையை அறிவதற்கு, தற்போதுள்ள முரண்பாடுகள், பிரச்சனைகளுக்கான காரணிகளையும் ஊக்கிகளையும் கண்டுபிடிக்க வேண்டியது மிக அவசியம். அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட ஏனைய வளமாக்கிகள், தூண்டிகளையும் கூட இனம் காண்பது அவசியம்.

கட்டமைப்புக் காரணிகள்

நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு ஒழுங்குமுறைக் கூடாகக் காணப்படுபவையே இந்த மூலகாரணிகளாகும். உதாரணமாக: பாரபட்சமான ஒழுங்கமைப்புக்களும் நடைதுமுறைகளும், அநீதியான ஒழுங்குவிதிகளும் பக்கச் சார்பான சட்ட திட்டங்களும் இன, மத, மொழி, கலாசார, பிரதேச ரீதியான முதன்மைப்பாடும் மேலான்மையும், அசமத்துவத்தையும் ஒரு பக்கத்தாருக்கான முன்னுரிமையை கொடுக்கவல்ல நிர்வாக முகாமைத்துவ அலகுகளும், ஒருபக்க நலன்பேசும் கொள்கைகளும் அமுலாக்கமும்.

தனி நபர் காரணிகள்

மறை நிலை உளப்பாங்கு, மனநிலை, ஆரோக்கியமற்ற அளவு கோல், விழுமியங்கள், பெறுமானங்கள், பக்கச்சார்பான ஒரு தலைப்பட்சமான பார்வைகளும் பார்வைக் கோணங்களும், தாழ்வு அல்லது உயர்வுச் சிக்கல், ஆரோக்கியமற்ற நடத்தைக்கோலம், சமூக எதிர்ப்புச் சிந்தனையும் சமூக நெறி பிறழ்வு நடத்தைகளும்

முரண்பாடுகளுக்கான சமூக, பொருளாதார அரசியல் காரணிகள்

பாரபட்சம், அசமத்துவம், அநீதியான நிர்வாக முகாமைத்துவக் கட்டமைப்புக்களும் இயக்க முறைகளும், பக்கச் சார்பு, முகத்தாட்சணியம், அறியாமை, கவனத்திலெடுக்காதுவிடல், ஓரம் கட்டல், ஒதுக்குதல், பிரித்து வைத்தல், பிரதேசவாதம், பிரிவினைவாதம், தேசியவாதம், இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், கலாசார, சமய, இன, பிரதேச மேலாண்மை, தின நபர் மைய நடவடிக்கை, அடக்குமுறை, ஒடுக்குமுறை.

பகுப்பாய்வுக்கான நுட்பமுறைகளும் கருவிகளும்



  • ஏபிசி முக்கோண ஆய்வுமுறை (ABC triangle analysis): முரண்பாட்டுக்குட்பட்ட ஒவ்வொரு தரப்பாரினதும் சூழ்நிலைகளையும், உளப்பாங்குகளையும் நடத்தைகளையும் பகுத்தாய்தல்
  • தேவை, பயக் கோட்பாடு (Need and fear theory): முரண்பாட்டுக்குட்பட்டவர்கள் எத்தகைய உடல், உள, சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளையும் தேவைப்பாடுகளையும் கொண்டுள்ளனர் என்பதையும் அவற்றின் நிமித்தம் அவர்களுக்குள்ள கவலைகள், பயங்கள் என்ன என்பதையும் பகுத்தாய்தல்
  • வரைபாக்கம் செய்தல்: முரண்பாட்டுக்குட்பட்டவர்கள் தொடர்புகள், கூட்டு, மறைமுக நேரடி ஆதரவு, இணக்கப்பாடு, உணவு, நேரடி மோதல், மறைமுக மோதல், பனிப்போர் நிலை, பலிக்கடா நிலை என்பனவற்றை கண்டறிதல்
  • வெங்காயத் தன்மைசார் கோட்பாடு (Onion theory): முரண்பாட்பட்டவர்களது உண்மையான தேவைகள், தேவைப்பாடுகள், ஈடுபாடு, மன ஆர்வம், ஆதங்கள் இவற்றின் நிமித்தம் அவர்கள் கொண்டுள்ள பகிரங்க நிலைப்பாடு உண்மையான வெளிக்காட்டா நிலைப்பாடு என்பனவற்றைக் கண்டறிதல்

முரண்பாடு

முரண்பாடு (conflict) என்பது எமது வாழ்வின் ஒரு பகுதி. அதனைத் தவிர்க்க முடியாது. எமது வாழ்வில் இருந்து பூரணமாக எடுத்துவிட முடியாது. ஆனால, முரண்பாடுகள் களையப்படவல்லன. அவை உருமாற்றம் செய்யப்பட்டு ஆக்க பூர்வ நிலைக்கு இட்டுச் செல்லப்படக் கூடியன.

ஆக்க பூர்வமாக சமூகத்தில் உள்ள சில பிரச்சனைகள் அல்லது சிக்கல்கள் நீண்ட காலமாக கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படாத சூழ்நிலையே முரண்பாடுகளை உருவாக்குகின்றன. பிரச்சனைகள் பொதுவாக முரண்பாடுகளை உண்டுபண்ணுகின்றன. முரண்பாடுகள் இன்னும் அதிகமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. பிரச்சனைகளை தீர்க்க முற்படும்போது முன்னெடுக்கும் அணுகுமுறைகளின் மட்டில் அதில் உள்ளோர் உடன்படா நிலையை எட்டும் போதே முரண்பாடுகள் தோன்றுகின்றன. தோன்றிய முரண்பாடுகள் தீர்க்கப்படாதபோது அதிலுள்ளோர் அதனை தீர்க்க வன்முறையை நாடலாம் அல்லது பின்வாங்கலாம். இதனால் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில்லை. மேலும் மேலும் முரண்பாடுகள் வளர்கின்றன.



முரண்பாடுகள் இருமட்டங்களில் நிகழ்கின்றன. அவற்றை உள் முரண்பாடுகள், இடை முரண்பாடுகள் என வகைப்படுத்தலாம்.

உள் முரண்பாடுகள்
இடை முரண்பாடுகள்
ஒருவருக்குள்
பலருக்கிடையில்
குடும்பத்துக்குள்
குடும்பங்களுக்கிடையில்
நிறுவனத்துக்குள்
நிறுவனங்களுக்கிடையில்
சமூகத்துக்குள்
சமூகங்களுக்கிடையில்
இனத்துக்குள்
இனங்களுக்கிடையில்
நாட்டுக்குள்
நாடுகளுக்கிடையில்

முரண்பாடுகள் பல்வேறு நிலைகளுக்கூடாகவே ஏற்படுகின்றன. அவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம்.

முரண்பாட்டுக்கான முன் சூழல்

முரண்பாடு உள்ளதை யாரும் உணர்வதில்லை. பல பிரச்சனைகள் கவனிக்கப்படாமலே அவை ஆழப்படுத்தப்பட்டுவரும் சூழ்நிலையும் முரண்பாட்டை ஏற்படுத்தவல்ல மூலகாரணிகள் இனங்காணப்படாமலும் அவை பல பிரச்சனைகளுக்கூடாக பலம்பெறுவதற்கும் வழிவகுக்கப்படும். தமக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறியாமலே அச்சூழலில் மக்கள் உணர்தகு நிலை அற்று விழிப்புணவற்றுக் காணப்படுவர்.

மறை நிலை முரண்பாடுகள் 

நேரடியாகத் தென்படாமல் மறைமுகமாக இருந்து கொண்டே இருப்பவை. பல்வேறு பிரச்சனைகள், சம்பவங்கள் வாயிலாக வெளிப்படுபவை. மக்கள் இவற்றை ஏதோ பிரச்சனை எனப்பார்த்து சமாளித்து விடலாம் என எண்ணுவர். அத்துடன் இவை பற்றிய விழிப்புணர்வோ, உணர்தகு நிலையோ அற்று காணப்படுவர். மேலோட்டப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டால் போதுமானது என்ற சிந்தனை முரண்பாடு சிக்கல் மிக்கதாக வலுப்பட வழி சமைக்கும்.

மேலோட்டமாகத் தென்படும் முரண்பாடுகள்

எழும் பிரச்சனைகளும் சிக்கல்களும் உடனடியாக கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக் காட்டும் மக்கள் இம்முரண்பாட்டில் உட்பட்டோரை இனங்காண்பர். ஆனால் முரண்பாட்டுக்கான காரணிகளை கண்டுகொள்ள மாட்டார்கள். முரண்பாட்டாளர்களை இனங்காண்பதனால் தாமும் தமது நியாயத்துக்கேற்ப பக்கம் சேர்ந்து ஒரு தரப்பாரை ஆதரிப்பர். இவ்வாறு இவர்களும் முரண்பாட்டின் பங்குதாரர்களாகி, முரண்பாட்டின் மூல காரணிகளை இனங்கண்டு பிடிக்க முடியாத வண்ணம் ஒரு பக்கச் சார்புடையவர்களாக மாறிவிடுவர். சிலவேளை மேலோட்டமாகக் காணப்படும் முரண்பாடுகள் மூலகாரணிகளை அல்லது பலமான மூலங்களை கொண்டிராமல் பிரச்சனைகளால் அதாவது தண்ணீர், போக்குவரத்து இல்லை என்ற பிரச்சனைகளால் எழுந்தவையாகக் கூட இருக்கலாம்.

பகிரங்க முரண்பாடுகள்

இவ்வகையானவை ஆழமான மூல காரணிகளையும் வெளியே தெளிவாகத் தெரியவல்ல வன்முறையையும் கொண்டு வெளித்தெரியும். மூலகாரணிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகள் மற்றும் வன்முறை, அதன் தாக்கம், விளைவுகள் என்பனவற்றில் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டிய ஒரு நிலையையும் கொண்டு காணப்படும்.