மொழிபெயர்

வட இலங்கை அரசின் நகர அமைப்பு

யாழ்ப்பாண அரசு என்று பரவலாக அறியப்படும் வட இலங்கையின் அரசு எப்போது இருந்தது, எங்கு இருந்தது, அதன் பெயர் என்ன, எங்குவரை ஆட்சி எல்லை இருந்தது என்பது போன்ற கேள்விகள் மட்டில் வேறுபட்ட தகவல்கள் காணப்படினும், வட இலங்கையில் ஓர் அரசு இருந்தது என்பது வரலாற்று ஆதாரங்கள் மூலம் மெய்ப்பிக்கப்பட்ட ஒரு விடயமாகும். இது பற்றிய பல ஆய்வுகளும், அது சார்ந்த நூல்களும் அவ்வப்போது வெளி வந்து கொண்டிருக்கின்றன.

யாழ் அரசின் எல்லைகள்
யாழ்ப்பாண அரசு என்பது வட இலங்கையின் தற்போதைய வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் அமைந்திருந்த அரசைக் குறிக்கின்றது. இது பொதுவாக கி.பி 1215 முதல் 1624 வரையான காலப்பகுதியில் அமைந்திருந்தது எனக் கருதப்படுகிறது. வையாபாடல் இவ்வரசின் ஆரம்பம் கி.மு. 101 என்று கூறுகிறது. ஆனால், வைபவமாலை கி.பி. 1314 என்று கூறுகின்றது. யாழ்ப்பாண அரசு கி.பி. 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் என பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 11 ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான அடித்தளத்தை உருவாக்கின எனலாம்.

வட இலங்கை அரசின் தலைநகர் சிங்கைநகர் (சிங்கை), நல்லூர் ஆகிய இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் இருந்தன என்று ஒரு கருத்தும், இரு பெயர்களும் ஒன்றைக் குறிப்பிடுகின்றன என்ற வேறு ஒரு கருத்தும் உள்ளன. சிங்கைநகர் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வல்லிபுரம் பகுதியில் காணப்பட்ட ஆரம்பகாலத் தலைநகரம் என சிலர் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். நல்லூர் பின்னர் உருவாகிய தலைநகர் என வேறுசில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், தற்போதைய யாழ்ப்பாண நகருக்கு அருகேயுள்ள நல்லூர், அரசின் (இறுதிக்காலத்தில்) தலைநகராயிருந்ததென்பதில் ஆதாரங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதும் நல்லூரைத் தவிர ஒரு அரசுக்குரிய தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

வட இலங்கையில் அமைந்திருந்த அரசு பல பெயர்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாண அரசு, யாழ்ப்பாண இராசதானி அல்லது யாழ்ப்பாண இராச்சியம் (Jaffna Kingdom), ஆரியச்சக்கரவர்த்தி அரசு (Kingdom of Aryacakravarti), வடவிலங்கை நாகநாடு, சிங்கை நாடு, மணவை, ஈழம், உத்தர தேசம், தமிழ்ப்பட்டிணம் ஆகிய பெயர்கள் குறிப்பிடத்தக்க பெயர்களாகும்.

அரசின் ஆட்சி எல்லை பற்றி தெளிவற்ற தகவல்கள் காணப்படுகின்றன. சுமார் 1300 களில் யாழ் குடாநாட்டுப் பகுதியை தலைநகராகக் கொண்டு, வன்னிப்பகுதி முழுவதையும் உள்ளடக்கி குறிப்பிட்ட காலத்தில் இருந்தது என்று கருதப்படுகின்றது. சுமார் 1600 களில் புத்தளம், திருகோணமலை வரை அரசு பரந்து இருந்ததாகவும் கருதப்படுகின்றது. அத்தோடு அரசின் உச்ச வளர்ச்சியில் கோட்டை (கொழும்பு), கம்பளை, கிழக்குப் பகுதிகளில் செல்வாக்குச் செலுத்தியது எனவும் கருதப்படுகின்றது.

நல்லூர் நகரம்

யாழ்ப்பாண அரசின் நகர அமைப்பு
நல்லூர் நகரம் இந்து சமய முறைப்படி, அரண் சூழ்ந்த நகராக (நல்லூர்க் கோட்டை) அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கோயில்கள், சந்தை, அரச மாளிகைகள், தொழிலாளர் இருப்பிடங்கள் (தச்சர், கொல்லர், ஓவியர், தட்டார், இரத்தின வணிகன், இசை வல்லுனர்), கோட்டைகள், நகர மதில், அரச முக்கியஸ்தர் இருப்பிடங்கள் (அரச ஊழியர், படைவீரர், வணிகர், அரச புலவர்), பூங்கா (சிங்காரவனம்), கோபுரங்கள், மாடங்கள் (அந்தணர், உழவர்) குளங்கள், நீதி மண்டபம், கொட்டாரம் (யானைப் பந்தி, குதிரைப் பந்தி), மனைகள் (மருத்துவர், சோதிடர்) ஆகியன அமைந்து இருந்தன.

நான்கு திசைகளிலும் நகரத்திற்கான அரணிடப்பட்ட வாயில்கள் அமைந்திருந்தன. கிழக்குப் பகுதியில் வெயிலுகந்த பிள்ளையார் கோயில், மேற்குப்பகுதியில் வீரமாகாளியம்மன் கோயில், தெற்குப்பகுதியில் கைலாசநாதர் கோயில், வடக்குப்பகுதியில் சட்டநாதர் கோயில், சாலை விநாயகர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில் என்பன அமைந்து காணப்பட்டன. நகர மத்தியிலிருந்து கிழக்கு நோக்கிய பகுதியில் நல்லூர்க் கந்தன் கோயில் அரண்மனைக்கு அண்மித்துக் காணப்பட்டது. நகரில் மத்தியில் முத்திரைச் சந்தை காணப்பட்டது. கிழக்கிருந்து மேற்காகவும், வடக்கிருந்து தெற்காகவும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

வடகிழக்குப் பகுதி அரச தெய்வம் சார் பகுதியாகக் காணப்பட்டது. இங்கு நல்லைக் கந்தன் கோயில், யமுனா ஏரி, அரச மாளிகைகள் (சங்கிலித் தோப்பு) போன்றன காணப்பட்டன. வடமேற்கில் அரசன், அரச பிரதானிகள், அந்தணர் (குருக்கள்) ஆகியோரின் வசிப்பிடங்கள் காணப்பட்டன. தென்மேற்கில் அரச ஊழியர், படைவீரர், சோதிடர், மருத்துவர் ஆகியோரின் குடியிருப்புக்கள், யானை, குதிரைப்படைகளின் கொட்டாரங்கள் காணப்பட்டன. தென்கிழக்கில் தொழிலாளர் இருப்பிடங்கள் (தச்சர், கொல்லர், ஓவியர், தட்டார், இரத்தின வணிகன், இசை வல்லுனர்) காணப்பட்டன.

நல்லூர் நகரைச் சுற்றிய கோட்டைகள்
நகரின் பாதுகாப்பிற்கான கோப்பாய், கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகிய இடங்களில் சிறு கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

யாழ் அரசின் தற்கால இடங்கள்
போர்த்துக்கேயர் ஆதிக்கம் உட்பட்ட பல காரணங்களினால் நகர் அழிவுற்றாலும் அதன் பிரதிபலிப்பு தற்போதும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படுகின்றது. குறிப்பாக நல்லூரில் அமைந்துள்ள கோயில்களையும், குளங்களையும், பண்டைய கட்டட எச்சங்களையும் குறிப்பிடலாம்.

உசாத்துணை நூல்கள்:

  • வ. ந. கிரிதரன். நல்லூர் ராஜதானி நகர அமைப்பு. மங்கை பதிப்பகம், 1996.
  • க. குணராசா. யாழ்ப்பாண அரச பரம்பரை. யாழ்ப்பாண அரச பரம்பரை வரலாற்றுக் கழகம், 2000.
  • S. Pathmanathan. The Kingdom of Jaffna: Part 1 (circa A.D. 1250 - 1450). 1978.